சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் பிரசாரத்தைத் தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் ஆர்க்காடு இளவரசரிடம் ஆதரவு கேட்டார்.
நடைபெற உள்ள பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார்.
தேர்தல் பிரசாரங்கள் தொடங்கியதில் இருந்து திமுக தலைவர் ஸ்டாலினின் மகன், திமுகவின் இளைஞரணிச் செயலாளர் என்பதால் உதயநிதி திமுகவின் பேச்சாளராக தமிழ்நாடு முழுக்க பயணம் மேற்கொண்டு இருந்தார்.
இந்நிலையில் தற்போது சென்னை திரும்பி உள்ள உதயநிதி, தனது தொகுதியில் பிரசாரத்தைத் தொடங்கினார். இதன் முதல் கட்டமாக ஆர்க்காடு நவாப் குடும்பத்தின் அதிகாரபூர்வ இல்லமான அமீர் மகாலில் ஆர்க்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலியை உதய நிதி ஸ்டாலின் சந்தித்து ஆதரவு கேட்டார்.
இந்த சந்திப்பின் போது உதயநிதி ஸ்டாலினுடன் முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்ட பல திமுக நிர்வாகிகளும் உடன் இருந்தனர். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்க்காடு இளவரசர் ‘இசுலாமியர்கள் அதிகம் உள்ள பழைமை வாய்ந்த தொகுதி சேப்பாக்கம். இங்கு இளம் பறவையாகப் போட்டியிடும் கலைஞரின் பெயரன் உதயநிதி கட்டாயம் வெற்றி பெறுவார்’ என்று கூறினார்.
ஆர்க்காடு இளவரசருடனான சந்திப்புக்குப் பின்னர் சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வீடுவீடாகச் சென்று பிரசாரத்தைத் தொடர்ந்தார்.
நமது நிருபர்