இந்தியாவில் டுவிட்டர் தளம் சிறிது நேரம் முடங்கிய நிலையில், பின்பு மீண்டும் செயல்படத் தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் புதிய டிஜிட்டல் விதிகளுக்கு இணங்க கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் ஒப்புக்கொண்ட நிலையில் டுவிட்டர் மட்டும் மறுத்து வருகிறது.
இதனால் மத்திய அரசுக்கும், டுவிட்டர் நிறுவனத்திற்கும் இடையே நாளுக்குநாள் மோதல் அதிகரித்து வருகிறது. புதிய டிஜிட்டல் விதிகளை ஏற்க டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு பல முறை அவகாசம் வழங்கியும், அதனை ஏற்காததால் அந்நிறுவனத்திற்கான சட்ட பாதுகாப்பை திரும்ப பெற்றது மத்திய அரசு.
இந்நிலையில் இந்தியாவில் டுவிட்டர் தளமானது இன்று காலை சிறிது நேரம் முடங்கிய நிலையில் பின் மீண்டும் செயல்பட தொடங்கியது. இது மத்திய அரசின் நடவடிக்கையா அல்லது டிவிட்டர் தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறா என்பது தெரியவில்லை. இதுகுறித்து டுவிட்டர் இந்தியா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கியதாகவும், சரி செய்யப்பட்டு விட்டதாகவும், பயனாளர்கள் தங்கள் பக்கங்களில் புதிய ட்வீட்டுகளை எப்போதும் போல் காண முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளது.