மத்திய அரசை, ஒன்றிய அரசு என கூறுவதற்கு தடையில்லை என உயர்நீதிமன்ற மதுரைகிளை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் அனைவரும், ஒன்றிய அரசு என மத்திய அரசை அழைத்து வருகின்றனர். இதற்கு சில அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சட்டப்பேரவையில் பேசிய பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், மத்திய அரசு என்று குறிப்பிடாமல் ஒன்றிய அரசு என சொல்வதன் நோக்கம் என்ன? என்பதை முதல்வர் விளக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசு என கூறுவதை சமூக குற்றம் என நினைக்க வேண்டாம், இந்தியா மாநிலங்களை கொண்ட ஒன்றியம் என்றே அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும், ஒன்றியம் என்ற வார்த்தையில் கூட்டாட்சி தத்துவம் அடங்கி இருப்பதால் தான் அதை பயன்படுத்துவதாகவும், இனியும் அதை தான் பயன்படுத்துவோம் என்று முதல்வர் ஸ்டாலின் அனல் பறக்க பதிலளித்தார்.
இந்நிலையில் ஒன்றியம் வார்த்தையை பயன்படுத்த தடை விதிக்க கோரி, திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதனை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, மத்திய அரசை ஒன்றிய அரசு என கூறுவதற்கு தடையில்லை எனவும் முதலமைச்சரும் மற்ற அமைச்சர்களும் இப்படி தான் பேச வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது எனவும் தெரிவித்தனர்.
மேலும், ஒன்றியம் வார்த்தைக்கு தடை கோரிய ராமசாமியின் மனுவை தள்ளுபடி செய்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.