சாவை பற்றி நான் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. நான் இறந்துபோனால் எனது கைத்துப்பாக்கியை தோழர்கள் எடுத்துக்கொள்வார்கள். அப்போதும், அதிலிருந்து தோட்டாக்கள் சீறிப்பாயும் என்று முழங்கிய சேகுவேரா பிறந்த தினம் இன்று. அவரை பற்றி விளக்குகின்றது இந்த தொகுப்பு..
‘சே குவேரா’ என்று அழைக்கப்படும் எர்னெஸ்டோ குவேரா 1928 ஜூன் 14-ம் நாள், அர்ஜென்டினா நாட்டின் ரோசாரியோவில் பிறந்தவர்.
வசதியான நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். 1952-ல், பியூனோஸ் எய்ரஸ் பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்ற ஒரு மருத்துவ மாணவர்.
பிற்காலத்தில், ‘லட்சிய வீரர்’ என்று உலகளவில் பெயரெடுத்தார். மாணவப் பருவத்திலேயே, பெரோண் ஆட்சியை எதிர்த்து, அரசியலில் ஈடுபடவும் ஆரம்பித்தார்.
சே குவேராவின் வீட்டில் 3,000 நூல்களுக்கு மேல் இருந்தன. நூல்களை வாசிப்பதில் அவருக்கு இருந்த ஆர்வம் தான் இவருக்கு புரட்சி தீ வளரகாரணம் எனலாம்.
இவற்றுள், மார்க்ஸ் (Karl Heinrich Marx), போல்க்னர், வேர்னே போன்றவர்கள் எழுதிய நூல்களில் சே வுக்கு சிறப்பான ஆர்வம் இருந்தது.
அது மட்டும் அல்லாது ஜவஹர்லால் நேரு, லெனின் போன்றவர்களது நூல்களையும், பிரான்ஸ், ஏங்கெல்ஸ், வெல்ஸ், புரொஸ்ட் ஆகியோருடைய நூல்களையும் அவர் விரும்பி வாசித்தார்.
சில காலத்துக்குப் பிறகு, சே குவேரா தன்னை ஃபிடல் காஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில் இணைத்துக்கொண்டார்.
அப்போது சேவுக்கு 27 வயதுதான். கியூபா தனது சொந்த நாடு என்ற காரணத்தினால் ஃபிடல் காஸ்ட்ரோ போராட வேண்டிய அவசியமானது ஆனால், சேவுக்கு அப்படி அல்ல. தனக்கு முற்றிலும் சம்பந்தமே இல்லாத ஒரு தேசத்தில் அந்த நாட்டு மக்களின் விடுதலைக்காகத் தன் உயிரைப் பணயம்வைத்து ஆயுதம் ஏந்தினார்.
அவரது உழைப்பு வீண்போகவில்லை.1958-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புரட்சிப் படை ஹவானாவுக்குள் ஊடுருவியபோது, கியூபா முழுவதும் காஸ்ட்ரோவிடம் வந்துசேர்ந்தது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வெற்றி உலக நாடுகள் அனைத்தையும் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. அப்போது ‘டைம்’ பத்திரிகையானது ‘புரட்சிகளின் மூளை சே’ என்று.
1959 ல் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதும் மத்திய வங்கித் தலைவராக 14 ஆண்டுகள் பணியாற்றினார்.
அதன்பின், கியூபா தேசிய வங்கியில் தலைவராக நியமனம் செய்யப்பட்டு ரூபாய் நோட்டுகளில் சே எனக் கையெழுத்திடும் அளவுக்கு உயர்ந்தார்.
பின், தொழில் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். இவ்வளவு பதவிகள் வகித்தபோதும் எப்போதும் தன்னை ஒரு சராசரி குடிமகனாகவே நினைத்து விவசாயம் செய்துவந்தார்.
சேகுவேராவுக்கும் ஃபிடலுக்கும் இடையே யுத்தத்துக்கு முன்னும், பின்னும் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவர்களின்நட்பு உயிரினும் மேலாக இருந்து வந்தது.
கியூபாவில் புரட்சி வெற்றி பெற்று, அரசியல் பதவிகளை அலங்கரித்த சே தன் வாழ்நாட்களை முழுமையாக கியூபாவில் மட்டும் காலத்தை கழிக்க விரும்பவில்லை.
கியூபாவைப் போன்ற பல்வேறு அரசியல் பொருளாதாரச் சவால்களைக் கொண்ட லத்தின் அமெரிக்க தேசங்களின் நிலைமை சேவின் நினைவுகளை ஆக்கிரமித்திருந்தன.
கியூபாவை விட்டு வெளியேறும் முன், தனது நண்பரும் கியூப அதிபருமான பிடல் காஸ்ட்ரோவுக்கு இப்படி கடிதம் எழுதுகிறார் சே.
அதில் என்னுடைய எளிமையான முயற்சிகளும் உதவிகளும் சில நாடுகளுக்குத் தேவைப்படுகிறது. ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடுவதை கடமையாக மேற் கொள்வேன். அதை நிறைவேற்றவும் செய்வேன். எனது மனைவி மக்களுக்காக எந்தச் சொத்தையும் நான் விட்டுச் செல்லவில்லை. அதற்காக வருத்தப்படவும் இல்லை. நமது முன்னேற்றம் எப்போதும் வெற்றியை நோக்கியே. வெற்றி அல்லது வீரமரணம் என எழுதினார் சே.
தன் வாழ் நாளெல்லாம் மக்களுக்காக போராடிய சேகுவாரா 1967-ம் ஆண்டு பொலிவியக் காடுகளில், போராட்ட களத்தில் அமெரிக்க படைகளால் கைது செய்யபடுகிறார்,
அமெரிக்க அதிகாரிகளால் பொலிவியாவில் உள்ள பள்ளிக்கூடத்தில் அவரை சிறைவைக்கின்றனர். அங்கு அவருக்கு உணவு வழங்க ஒரு பணிப்பெண் நியமிக்கப்பட்டார்.
அவரிடம்இது என்ன இடம்? என்று கேட்டார் ‘இது ஒரு பள்ளிக்கூடம்’ என்றார் பணிப்பெண். ‘இப்படியொரு மோசமான நிலையில் ஒரு பள்ளிக்கூடமா… எங்களின் போராட்டம் வெற்றி பெறட்டும், உங்களுக்கு புதிய பள்ளி ஒன்றைக் கட்டி தருகிறோம்’ என்று கூறினாராம் சேகுவேரா.
அக்டோபர் 9, 1967 சேகுவேரா சுட்டுக் கொல்லப்பட்டார். எந்தத் தேசம் அவரை அழிப்பதில் தீவிர முனைப்புக் காட்டியதோ,
எந்தத் தேசம் அவர் வரலாற்றை முழுவதும் அழிக்க வேண்டும் என்று எண்ணியதோ, அந்தத் தேசத்தில்தான் இன்று சேவின் முகம் பதிக்கப்பட்ட பொருட்கள் அதிகமாக விற்பனையாகின்றன.அடக்குமுறைகள் இருக்கும் வரையில் போராட்டங்கள் நீடித்துக் கொண்டுதான் இருக்கும். போராட்டங்கள் இருக்கும் வரையில்சே வும் மக்கள் நினைவுகளில் இருப்பார்