2015 ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு அடிப்படை அறிவு கூட இல்லாத ஆட்சியாளர்களே காரணம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 2015ம் ஆண்டு சென்னையில் பெய்த கனமழையின் போது செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டது குறித்து சட்டப்பேரவையில் விவாதம் ஏற்பட்டது. உண்மையை மூடி மறைக்க எடப்பாடி பழனிசாமி தீவிர முயற்சிகளை மேற்கொண்டார்.
உண்மையை எவராலும் மறுக்க முடியாது. நடந்தவற்றை கூறினால்தான் உண்மை வெளிவரும். முன்னறிவிப்பு ஏதுமின்றி நவம்பர் 17ம் தேதி மற்றும் டிசம்பர் 2ம் தேதி இரவு நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் அப்பாவி மக்கள் அடித்துச் செல்லப்பட்டார்கள். இதற்கு ஜெயலலிதாதான் பொறுப்பு என குற்றம் சாட்டப்பட்டது.
திடீரென அதிக அளவில் தண்ணீரை திறந்தால் மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவார்கள் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் ஆட்சியாளர்கள் செயல்பட்டதாக கூறியுள்ள அழகிரி.
நூற்றுக்கணக்கான உயிரிழப்பு ஏற்படுவதற்கு அதிமுகதான் காரணம். செம்பரம்பாக்கம் ஏரி திறப்பதற்கு கீழ் நிலையில் உள்ள அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை.
பூண்டி ஏரியை திறக்காமல் காலம் தாழ்த்தியதால் ஒரே நேரத்தில் அனைத்தையும் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதை எவராலும் மறக்க முடியாது. ஒரு லட்சம் கன அடி நீர் அடையாறு ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுத்து அப்பாவி மக்கள் அடித்துச் செல்லப்பட்டதற்கு அன்றைய முதல்வர் தான் காரணம்.
மேலும், பேரிடரை தடுக்க அரசு செயல்பட வேண்டுமே தவிர நிகழ்ந்த பிறகு நிவாரண உதவி செய்வது என்பது பேரிடர் மேலாண்மை ஆக இருக்க முடியாது என கூறியுள்ளார்.
ஆகவே, இனி ஒரு சம்பவம் இது போல நிகழாமல் இருக்க தமிழக முதல்வர் தலைமையிலான அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.