ஒரு கையில் பிரம்பையும் மற்றொரு கையில் சாக்பீசையும் வைத்துக்கொண்டு பள்ளியில் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டு அன்றைய பாடத்தை நடத்திவிட்டு மாணவர்களுக்கு கிளிப்பிள்ளை போல் சொல்லிக் கொடுப்பவர் ஆசிரியர் அல்ல தன் மாணவர்களை முன் நின்று நல்வழியில் நடத்திச் செல்ல வேண்டிய ஒருவர்
அது ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த இந்தியா .1890 காலக்கட்டத்தில் திருத்தணியில் இயங்கிய பள்ளிக்கு பிரைமரி போர்டு ஸ்கூல்’ என்று பெயர். அப்போது இந்தியா முழுவதும் பெரும்பாலான பள்ளிகள் வாடகை வீடுகளில்தான் இயங்கின.
உட்காருவதற்கு மண் தரைதான். மழை வந்தால் ஒழுகும் கூரைகள். திருத்தணியில் அப்படி ஒரு பள்ளியில்தான் அந்தப் பையன் படித்தான். அவன் பெயர், ராதா அந்த பையன் தான் பிற்காலத்தில் உலகின் தலைசிறந்த அறிஞர்களில் ஒருவராக மாறி பல்கலைக்கழகங்களில் ‘சக்கரவர்த்தி’ என் புகழோடு இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராக பதவியேற்றார் அவர்தான் சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன் தந்தை வீராசாமி, திருத்தணி ஜமீன்தார் ஒருவரிடம் கணக்கராக வேலை செய்தார். குறைந்த சம்பளத்தில் தனது பெரிய குடும்பத்தை காப்பாற்ற முடியாமல் திணறினார். தன் மகன் ராதாகிருஷ்ணனை கோயில் அர்ச்சகர் பணியில் சேர்ந்தால், குடும்பச் சுமை ஓரளவு குறையும் என முடிவு செய்தார்.
ஆனால சிறுவனாக இருந்த ராதாவோ மிக அற்புதமாக படித்தால் திருப்பதியில் வெள்ளைக்காரர்களால் நடத்தப்பட்ட, ‘ஹெர்மன்ஸ்பரி இவான்ஞ்சலிகர் லூதரன் ஸ்கூல்’ எனும் பிரபல பள்ளியில் படிக்க, கல்வித் உதவித்தொகை கிடைத்தது. புதுப் பள்ளியிலும் தன் தனித்திறன்களை வெளிப்படுத்தி, அனைவரையும் கவர்ந்தார் ராதாகிருஷ்ணன்.
பின்னர், சென்னை பல்கலைகழகத்தில் முதுகலைப் பட்டத்தை பெற்றார்.சென்னை பிரசிடென்சி கல்லூரியில் உதவி பேராசிரிரியராக வாழ்க்கையைத் தொடங்கினார்.
1918ம் ஆண்டு மைசூர் பல்கலைகழகத்தில் தத்துவ பேராசிரியராகவும் பொறுப்பு வகித்தார். இதையடுத்து, 1921ம் ஆண்டு கொல்கத்தா பல்கலைகழகத்திலும் தத்துவ பேராசிரியராக பணியாற்ற பரிந்துரைக்கப்பட்டார். தத்துவவியலில் நிபுணத்துவம் பெற்ற ராதாகிருஷ்ணன் எழுதிய “இந்திய தத்துவம்” என்ற புத்தகம் 1923ம் ஆண்டு வெளியிடப்பட்டது.
ராதாகிருஷ்ணனின் அபார ஆற்றலை கண்ட ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் அவரை இந்துமதங்களில் கூறப்பட்டுள்ள தத்துவங்கள் பற்றி சிறப்புரை ஆற்ற அழைப்பு விடுத்தது.
1931ம் ஆண்டு முதல் 1936ம் ஆண்டு வரை ஆந்திர பல்கலைகழகத்தின் துணைவேந்தராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ராதாகிருஷ்ணனின் தத்துவ நிபுணத்துவத்திற்காகவே அவரது பெயர் 1933ம் ஆண்டு முதல் 1937ம் ஆண்டு வரை 5 முறை தத்துவத்திற்கான நோபல் பரிசு பெறுவதற்கு பரிந்துரைக்கப்பட்டது.
பின்னர், 1939ம் ஆண்டு பனாரஸ் இந்து பல்கலைகழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். 1946ம் ஆண்டு யுனெஸ்கோவின் தூதுவராக நியமிக்கப்பட்டார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நாட்டை வளர்ச்சிப்பாதையில் முன்னெடுக்க அப்போதைய அரசும், சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்களும் தீர்மானித்தனர். இதையடுத்து, 1948ம் ஆண்டு ராதாகிருஷ்ணனை பல்கலைகழக கல்வி ஆணையத் தலைவராக அப்போதைய இந்திய அரசு நியமித்தது.
இதையடுத்து, 1952ம் ஆண்டு இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர், அவரது கல்விச் சேவையை பாராட்டும் விதமாக அவருக்கு 1954ம் ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி அவரை கவுரவித்தது. பின்னர், நாட்டின் இரண்டாவது குடியரசுத் தலைவராக 1962ம் ஆண்டு ராதாகிருஷ்ணன் பதவியேற்றுக் கொண்டார்.
ராதாகிருஷ்ணன் 1962ம் ஆண்டு நாட்டின் இரண்டாவது குடியரசுத் தலைவராக பதவியேற்றார். அந்தாண்டு அவரது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று அவரது நண்பர்கள் மற்றும் அவரிடம் பயின்ற மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அப்போது, அதற்கு பதிலளித்த ராதாகிருஷ்ணன் தனது பிறந்தநாளை தனித்தனியாக கொண்டாடுவதற்கு பதிலாக செப்டம்பர் 5-ந் தேதியை இந்தியாவில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் மரியாதை செலுத்தும் விதமாக ஆசிரியர் தினமாக கடைபிடித்தால் அது எனது பாக்கியமாகவும், பெருமையாகவும் இருக்கும் என்று கூறியுள்ளார். அவரது வேண்டுகோளை ஏற்று, அந்தாண்டு முதல் நாட்டில் ஆசிரியர் தினம கொண்டாடப்பட்டு வருகிறது.