தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழக சட்டப் பேரவையில் பேசியபோது, ”தமிழகத்தில் 90% மக்கள் செல்ஃபோன் வைத்திருக்கிறார்கள் தமிழ்நாடு வளர்ந்த மாநிலம்” – என்று கூறியுள்ள கருத்து சமூக வலைத்தளங்களில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா காரணமாக வீட்டில் உள்ள பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதற்காகவே பலர் திறன் பேசிகளை வாங்கினர். அதை வளர்ச்சி என்று சொல்வதா? செல்ஃபோன் அவசியமாகிவிட்டபோது அதை ஆடம்பரமாகப் பார்ப்பதா? – என்று சிலர் கேட்டு உள்ளனர்.
மேலும் சிலர், தமிழகத்தில் திறன் பேசிகளை வாங்கும் நபர்களில் பெரும்பாலானோர் மாதத் தவணையில் தொகை செலுத்திதான் வாங்குகின்றனர். கடனுக்கு செல்ஃபோன் வாங்குவதும் வளர்ச்சியா? – என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.
மேலும், கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக பிரசாரம் செய்யும்போது, ‘கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகம் பின்னடைவை சந்தித்துள்ளது, வளர்ச்சி இல்லை’ – என்று கூறினார்கள். இப்போது அமைச்சர் கூறும் 90% கைபேசிகளில் பெரும்பாலானவை முந்தைய அதிமுக ஆட்சியின்போது மக்களால் வாங்கப்பட்டவைதான். அப்போது அதிமுக பற்றிய திமுகவின் குற்றச்சாட்டுகள் பொய்யா? – என்றும் சிலர் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
இது தவிர தமிழக மக்களில் 75%பேர் சொந்தவீடுகளில் வசிப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். தமிழக இளைஞர்களில் பெரும்பாலானோரின் திருமணமே கூட சொந்த வீடு இல்லை என்ற காரணத்தால் தள்ளிப் போகும் சூழலில், அமைச்சர் எந்த அடிப்படையில் இப்படிக் கூறுகிறார்? – என்றும் கேள்விகள் எழுந்து வருகின்றன.