தமிழ்த்தேசியத்துக்கான பெருந்திட்டம் – நூல் மதிப்புரை:

SHARE

தமிழ்த்தேசியம் என்றால் என்ன? தமிழர் என்கிற தேசிய இன மக்கள் தங்களுடைய மொழி, நிலம், பண்பாடு, வரலாறு அனைத்தையும் காத்து, அவற்றைத் தலைமுறைகள் தோறும் கடத்திட தனக்கென சர்வ அதிகாரமும் கொண்ட இறையாண்மையுள்ள தமிழ்த்தேச குடியரசை தமிழர் தாயகத்தில் நிறுவது – இதுதான் தமிழ்த் தேசியம் என்கிற விடுதலை கருத்தியலுக்கான எளிய விளக்கம்.

இப்புவிப்பந்தில் தமிழருக்கான தாயகமாக விளங்குவது தமிழ்நாடு மற்றும் தமிழீழம். ஈழத்தில் தமிழ் தேசியம் என்கிற விடுதலை கருத்தியல் தமிழ்மக்களின் ஒன்றுபட்ட உணர்வாய் கலந்து, செயல்வடிவம் பெற்று, தமிழீழ விடுதலைப் புலிகள் என்கிற தமிழர் இராணுவத்தின் ஊடாக சுதந்திர தமிழீழ அரசு அமைந்து, பின்பு 2009இல் வல்லரசு நாடுகளின் சதித்திட்டங்களாலும் சூழ்ச்சிகளாலும் தற்காலிகமாக தமிழர் அரசு வீழ்த்தப்பட்டது. தற்போது ‘தமிழ்த்தேசியம்: மீளெம்புதல்’ என்கிற கட்டத்தை நோக்கி தமிழீழம் நகர்ந்து கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் தமிழ்த்தேசியம் எந்நிலையில் இருக்கிறதெனில் ‘தமிழ்த்தேசியமா? அப்படினா? வார்த்தையே புதுசா இருக்கு! எதாவது படத்தோட பேரா?’ – என்று பெரும்பான்மையான படித்த தமிழ் இளைஞர்களே கேட்கும் நிலைமையில் தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் வாழும் 8 கோடி தமிழர்களில், தமிழ்த்தேசியம் என்பதற்கு மேலே கூறியுள்ள விளக்கத்தை குடும்பத்தில் ஒருவராவது கூறுவாரா? என்பதும் ஐயமே! தமிழால் கருவாகி தமிழராய் உருவாகி தமிழ்த்தேசத்தில் பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் தருணத்திலே ‘தமிழ்ல அப்படி என்னப்பா இருக்கு? யாரெல்லாம் தமிழர்? தமிழ்த்தேசியம்னா என்ன?’ என்று கூச்சமின்றி கேட்கும் இழிநிலைமையை என்னவென்று சொல்வது?. 

ஈழத்தில் தமிழ்த்தேசியம் கருவாகி உருவாய் மலர்ந்து வளர்ந்த நிலைமையில் வன்முறையாக அழித்தொழித்தார்கள். ஆனால் தமிழ்நாட்டிலோ தமிழ்த்தேசியம் கருவிலே சிதைக்கப்பட்டதாகவே உணர்கிறேன். தமிழனை தமிழனாக உணரவிடாமல் அவனை இந்தியனாக, திராவிடனாக, குறிப்பிட்ட சாதிக்காரனாக,  மதத்தவனாக பிரித்து சிந்தனையை சீர்குலைத்து சிதைத்து விட்டார்கள். அதன் வெளிப்பாடு தான் 8 கோடி தமிழர்கள் வாழ்ந்தும் கூப்பிடும் தூரத்தில் ஈழதேசம் இருந்தும் மூன்றரை இலட்சம் தமிழ்மக்கள் கொத்துக்கொத்தாய் வல்லூறுகளால் பிய்த்து எறியப்பட்டபோதும் ‘பக்கத்துநாட்டு பிரச்சினையில நாம ஏன் தலையிட்டுகிட்டு?’ என்று சர்வ சாதாரணமாக இங்குள்ள பலர் கடந்து சென்றது!.

சு.சேதுராமலிங்கம் அவர்களின் ‘தமிழ்த்தேசியத்திற்கான பெருந்திட்டம்’ என்னும் நூல் சிதைக்கப்பட்ட தமிழ்த்தேசிய கருவை மீளெழுச்சி கொள்ள வைக்கும் பெருமருந்து. தமிழர்கள் தங்களின் அறிவை தெளிவாக்கி, பார்வையை விசாலமாக்கி, செயல்தளத்தை விரிவுபடுத்த வழிவகுக்குகிறார் சு.சேதுராமலிங்கம். தமிழ்த்தேசியத்தின் அடிப்படைக்குறிக்கோள், கருவிக்குறிக்கோள் அதை நோக்கிய செயல்பாடுகள், படிநிலைகள், தேசிய இயக்க கட்டுமானம் என தமிழ்த்தேசியத்தின் பல்வேறு பரிணாமங்களையும் அறிவியல் தத்துவங்களோடு ஆழமாக அலசுகிறார். சமூகம், அரசியல், அமைப்பு உருவாக்கம்-இயக்கம், குறித்த பழைய அறிவியல் கோட்பாடுகளை புறந்தள்ளி, அவற்றை தற்போதைய நவீன காலசூழலுக்கு ஏற்ப சீர்படுத்தி, புதுமையான விளக்கங்களோடு பல்துறை அறிவியலாளர்களின் மேற்கோள்களுடன் இயங்கியல் விதிகளுக்கு இயைந்து உத்திகளையும் வியூகங்களையும் செயல்திட்டங்களையும் படைத்திருக்கிறார். 

தேசிய விடுதலைக்காக போராடும் தேசிய இயக்கங்களின் முதற்கட்ட நடவடிக்கைகளாக நூலாசிரியர் கூறுபவை:

* வரலாறு இல்லாமல் தேசம் இல்லை. எனவே தேசத்தின் வரலாற்றை முதலில் எழுதுவது.

* சாதி,மத பாகுபாடுகளை கடந்து தமிழ்மக்களை தேசிய இனமாக ஒன்றிணைக்கும் பட்சத்தில் பொதுவான பண்பாட்டை உருவாக்க, தற்போதைய காலசூழலுக்கு ஏற்ப பழைய சடங்கு சம்பிரதாய பழக்கவழக்கங்களின் திருத்தங்கள் மேற்கொண்டு, முற்போக்கான புதுமைகளை புகுத்தி, தேசிய அடையாளங்களுக்கான சின்னங்கள், அடையாளங்கள் போன்வற்றை உருவாக்கி, தொல்தமிழினத்தின் மூத்தோர்களின் போதனைகள், அறநூல்கள் போன்றவற்றை கொண்டு அதியுச்ச உயர் தேசிய பண்பாட்டை உருவாக்க வேண்டும். ஏனெனில் பண்பாட்டுப் புரட்சி இல்லாது அரசியல் புரட்சி வெல்லாது!

* வளர்ந்து வரும் நவீன தகவல் தொழில்நுட்ப சாதனங்கள், நவீன ஊடகங்கள் போன்றவற்றை பயன்படுத்தி, தேசிய மொழியின் இலக்கிய இலக்கண விதிகள், கட்டுக்கோப்புகள் போன்றவற்றில் தேவைக்கேற்ப சீர்படுத்தி, தேசிய இனத்தின் அனைத்து தரப்பு மக்களையும் தகவல் செயலாக்கத்தில் ஈடுபடுத்த வேண்டும். தகவல்களே பெருஞ்செல்வம் (Information is wealth).

* தேசமெங்கும் கல்விகூடங்களின் வாயிலாக தேசிய மொழியையும் அதன் அடையாளங்களான இலக்கியம், வரலாறு, கலை மற்றும் அறிவியல் போன்றவற்றை பரப்பி இளந்தலைமுறையினரை தேசியப்பண்பாட்டில் வளர்க்க வேண்டும். தேசிய விடுதலை இயக்கம் நாட்டை கைப்பற்றுவதற்கு முன் கல்விக்கூடங்களை கைப்பற்ற வேண்டும்.

மேற்குறிப்பிட்ட செயல்பாடுகள் நோக்கி தமிழ்த்தேசிய இயக்கங்களின் பங்களிப்பு எந்த அளவில் இருக்கிறது? என்று நம்மை நாமே கேட்டுக்கொள்வோம். தமிழ்த்தேசிய இயக்கங்கள் தங்களை சுயஆய்வுக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டிய காலமிது. தமிழ்நாட்டில் ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருக்கின்றன. தமிழ்த்தேசியத்திற்கான வரையறையை ஐம்பது இயக்கங்களும் ஐம்பது விதமாக வரையறுப்பார்கள். தமிழ்த்தேசிய இயக்கங்களுக்குள்ளே இத்தகைய குழப்பங்களும் தெளிவின்மையும் இருந்தால் தமிழ்மக்களின் நிலைமை என்ன?

தமிழ்த்தேசிய இயக்கங்கள், கட்சிகள் செய்ய வேண்டிய முதற்கட்ட வேலைகளாக நூலாசிரியர் கூறுபவை:

* அனைத்து தமிழ்த்தேசிய இயக்கங்களும் ஒன்றிணைந்து தமிழ்த்தேசியத்திற்கான அடிப்படை குறிக்கோள்களை தெளிவாக வரையறுக்க வேண்டும். அடிப்படை குறிக்கோள்களை வரையறுத்த பின் அவற்றில் மாறுதல்கள், குழப்பங்கள் இருக்கக்கூடாது.

* அடிப்படைக்குறிக்கோள்களின் அடிப்படையில் பல்வேறு தமிழ்த்தேசிய இயக்கங்களும் இணைந்து குழுக்களின் குழுவை(Teams of Teams) உருவாக்க வேண்டும். ஒவ்வொரு தமிழ்த்தேசிய குழுக்களும் வெவ்வேறு கருவிக்குறிக்கோள்களை கொண்டிருப்பதே சிறப்பு. ஆயினும் தமிழ்த்தேசியத்தின் அடிப்படை குறிக்கோளை நோக்கியதாக கருவிக்குறிக்கோள்கள் வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட வேண்டும். 

*  தமிழ்த்தேசிய இயக்கங்கள் ஒன்றிணைந்து குழுக்களின் குழுவாக இயங்கும் விதமாக ஒத்திசைவான உயர் பண்பாட்டை உருவாக்க வேண்டும். அத்தகைய பண்பாடு குழுக்களுக்கு இடையே நெருங்கிய நம்பிக்கையையும் இறுக்கமான பகிர்ந்த உணர்வையும் அளித்து குறிக்கோளை நோக்கிய பாதையில் தெளிவாக செயல்படுவதற்கான நெறிமுறைகளை வகுத்தளிக்க வேண்டும்.

* தமிழ்த்தேசிய குழுக்கள் தங்களுடைய அறிவையும் ஆற்றலையும் மென்மேலும் கூர்மைப்படுத்தவும் தங்களுடைய செயல்பாடுகளையும் நகர்வுகளையும் பரந்துபட்ட அளவில் விரிவுப்படுத்த ஆரம்பங்கட்ட அறிவாயங்களை(Think Tanks) உருவாக்க வேண்டும். அறிவாயங்கள் அனைத்தும் பல்துறை வல்லுநர்கள், சிந்தனையாளர்கள், கள செயல்பாட்டாளர்கள் போன்றவற்றை கொண்டு குழுக்களின் குழுவாக உருவாக்க வேண்டும். அறிவாயங்கள் களத்தில் செயலாற்றும் தமிழ்த்தேசிய குழுக்களுக்கு வேண்டிய அறிவையும் ஆற்றலையும் அளித்து மேம்படுத்த வேண்டும். தமிழ்த்தேசிய இயக்கங்களும் அறிவாயங்களோடு இணைந்து ஒவ்வொரு நகர்வையும் ஆய்வுப்படுத்தி முன்னேற வேண்டும்.

மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து தமிழ்த்தேசிய இயக்கங்கள் புதிய பரிணாமத்தை நோக்கி நகர வேண்டும் என்கிறார் நூலாசிரியர். தேசியப்புரட்சிக்கான முதற்கட்டம் சமூக புரட்சியே. அறிவுப்புரட்சியே சமூகப்புரட்சிக்கு வழிவகுக்கும். இந்நூல் தமிழ்ச்சமூகத்தில் புதிய அறிவுப்புரட்சியை ஏற்படுத்துவதில் இன்றியமையாத பங்குவகிக்கும் என்பது திண்ணம். தமிழ்த்தேசிய இன விடுதலை நோக்கி நகரும் கற்றறிந்த சான்றோர்கள் அனைவரும் இந்நூலை படித்து கூடி விவாதித்து பயன்பெற வேண்டுகிறேன்.

வெளியீடு: ஆழி பப்ளிஷர்சஸ், சென்னை.

பக்கங்கள்: 132

விலை: ரூ.150

– சந்திரன்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி எழுதிய சூதாடி – நூல் அறிமுகம்

பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ – நூல் மதிப்புரை

திணிக்கப்பட்டதா திராவிடம்? – நூல் அறிமுகம்

எஸ்.ராமகிருஷ்ணனின் ‘காட்சிகளுக்கு அப்பால்’ – நூல் மதிப்புரை.

சங்கராபரணி முதல் தென்பெண்ணை வரை – நூல் மதிப்புரை

தனித்தமிழர்நாடு: மண்மீட்புக்கான வரைப‌டங்கள், சான்றுகள் மற்றும் சிந்தனைகளின் தொகுப்பு – நூல் அறிமுகம்

இரா.மன்னர் மன்னன்

’சுளுந்தீ’ தமிழர் வரலாற்று நாவல் – நூல் மதிப்புரை

சுப. உதயகுமாரன் எழுதிய ‘பச்சை தமிழ்த் தேசியம்’ – நூல் மதிப்புரை:

வேர்ச்சொற் கட்டுரைகள் – நூல் அறிமுகம்…

யுவால் நோவா ஹராரி எழுதிய சேப்பியன்ஸ் – மதிப்புரை.

ஒடுக்கப்பட்ட பெண்மையின் கதை சொல்லும் ‘தவ்வை’ நாவல் – நூல் மதிப்புரை

முனைவர் தொல்.திருமாவளவன் எழுதிய ’அமைப்பாய்த் திரள்வோம்’ – நூல் மதிப்புரை.

Leave a Comment