சூயஸ் கால்வாயில் கோரல் கிறிஸ்டல் எனும் சரக்கு கப்பல் மீண்டும் சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
எகிப்து நாட்டின் சூயஸ் கால்வாய் சர்வதேச அளவில் உலகின் மிக முக்கிய கப்பல் போக்குவரத்து வழித்தடமாக விளங்குகிறது. இந்த கால்வாயில், கடந்த மார்ச் மாதம் ‘எவர்கிவன்’ என்ற மிகப்பெரிய சரக்கு கப்பல் குறுக்கு பக்கமாகத் தரை தட்டி நின்றது.
இதன் காரணமாக, சர்வதேச சரக்கு கப்பல் போக்குவரத்து தடைப்பட்டு, உலக வர்த்தகத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது கிட்டத்தட்ட ஒரு வாரக் கால முயற்சிக்குப் பிறகு, ‘எவர்கிவன்’ கப்பல் மீண்டும் மிதக்கும் நிலைக்குக் கொண்டு வரப்பட்டது.
இருப்பினும் கப்பல் தரை தட்டி நின்ற காரணத்தினால் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை வழங்கும் வரை கப்பலை விட மாட்டோம் என ‘எவர்கிவன்’ கப்பலின் உரிமையாளரான ஜப்பானைச் சேர்ந்த ஷோய் கிசென் கைஷாவிடம், சூயஸ் கால்வாய் ஆணையம் தெரிவித்தது.
சூயஸ் கால்வாய் ஆணையம் கேட்ட இழப்பீட்டுத் தொகையை வழங்க, ‘எவர்கிவன்’ கப்பலின் உரிமையாளர் ஒப்புதல் அளித்ததை அடுத்து, 3 மாதங்களுக்குப் பிறகு ‘எவர்கிவன்’ கப்பலை சூயஸ் கால்வாய் ஆணையம் விடுவித்தது.
இந்நிலையில், 43 ஆயிரம் டன் எடை கொண்ட கோரல் கிறிஸ்டல் எனும் சரக்கு கப்பல் எகிப்து நாட்டின் சூயஸ் கால்வாயில் மீண்டும் சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கப்பலை மீட்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.