ஆப்கானிஸ்தானையும், அங்கு வாழும் மக்களையும் அழிப்பதை நிறுத்தங்கள் என உலகத் தலைவர்களுக்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள், நேட்டோ படைகள் இருந்ததால் கடந்த காலங்களில் தலிபான் தீவிரவாதிகள் ஒடுங்கி அடங்கி இருந்தனர்.
சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க அதிபராக இருந்த ட்ரம்ப் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் படிப்படியாக விலகக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து புதிய அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஜோ பைடன் இந்த ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதிக்கு முன்னரே அமெரிக்கப் படைகள் முழுமையாக ஆப்கானிஸ்தானிலிருந்து விலக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதனால் அங்கு மீண்டும் பல பகுதிகளை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றி வருகிறார்கள்.
கடந்த மாதம் தலிபான்களுக்கும் அரசுப் படைகளுக்கும் ஏற்பட்ட மோதலின் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.இந்நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் வேதனையுடன் உலகத் தலைவர்களுக்குக் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அதில் அன்பார்ந்த உலகத் தலைவர்களே! என்னுடை தேசம் முழுமையான நிர்வாக சீர்கேட்டில், குழப்பத்தில் இருக்கிறது. ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள், குழந்தைகள், பெண்கள் நாள்தோறும் துப்பாக்கி குண்டுகளுக்கும், குண்டுகளுக்கும் வீரமரணம் அடைகிறார்கள்.
எங்கள் மக்களின் வீடுகள், சொத்துக்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் புலம்பெயர்ந்துள்ளார்கள். எங்களை பெரும் குழப்பத்திலும், முழுமையான சீர்கேட்டிலும் கைவிட்டுவிடாதீர்கள்.
ஆப்கானிஸ்தான் மக்களைக் கொல்வதை நிறுத்துங்கள், ஆப்கானிஸ்தானை அழிப்பதை நிறுத்துங்கள். எங்களுக்கு அமைதி தேவை’ என தெரிவித்துள்ளார்.