ராதாரவி மீது நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? – அன்புமணி கேள்வி அன்புமணி ராமதாஸ் இன்றும் தனது பிரசாரத்தில் ஆ.ராசா சர்ச்சை குறித்த கேள்விகளை எழுப்பினார்.
பாமக மாநில இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொண்ட அவர் தனது பிரசாரத்தில் முதல்வரின் தாயை ஆ.ராசா விமர்சித்ததாக எழுந்த சர்ச்சை குறித்து பேசினார்.
அப்போது, முன்னர் திமுகவில் இருந்த நடிகர் ராதாரவி நடிகை நயன்தாராவை அவதூறாகப் பேசிய போது அவர் மீது கட்சி ரீதியில் நடவடிக்கை எடுத்த ஸ்டாலின், சமீபத்தில் எடப்பாடி பழனிசாமியின் தாயாரை தரக் குறைவாக விமர்சித்த திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? – என்றும், திமுக கூட்டணியில் உள்ள தலைவர்கள் யாரும் ஆ.ராசாவை கண்டிக்காதது ஏன்? – என்றும் கேள்வி எழுப்பினார்.
ஐந்து நாட்கள் முன்பு, ’ஆ.ராசா பேசியது போல யாராவது பா.ம.க.வில் பேசினால் அடி உதை விழும்’ என்று அன்பு மணி பேசி இருந்தார், மூன்றுநாட்கள் முன்பு பிரசாரத்தில் அன்புமணி, ‘பெண்களை பற்றி கொச்சையாக பேசியுள்ள ஆ.ராசா… உனக்கு இருக்கு ராசா’ என்று பேசி இருந்தார். இப்படியாக அன்புமணி தனது பிரசாரங்களில் ஆ.ராசா-வைத் தாக்கி தொடர்ந்து பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நமது நிருபர்