சிவசங்கர் பாபா மாணவிகளிடம் ஆபாசமாக பேச பயன்படுத்திய இமெயிலை சிபிசிஐடி போலீசார் முடக்கி உள்ளனர்.
சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் மற்றும் குழந்தைகளிடம்பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனை தொடர்ந்து மாணவிகள் 3 பேர் நேரடியாக அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், டெல்லி காசியாபாத்தில் தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபாவை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து செங்கல்பபட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் சிவசங்கர் பாபாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், இதனால் அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்நிலை தேறியவுடன் சிவசங்கர் பாபாவை 3 நாட்கள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரித்தது.
குறிப்பாக பள்ளியில் உள்ள சிவசங்கர் பாபாவின் அறைக்கு அழைத்து சென்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். அங்குள்ள பெண்டிரைவ், ஹார்டிஸ்க் போன்றவற்றை கைப்பற்றினர்.
மேலும் சிவசங்கர் பாபா பயன்படுத்திய லேப்டாப் ஆகியவற்றை சோதனை செய்த போது இ_மெயில் வழியாக மாணவிகளுடன் ஆபாசமாக உரையாடியது தெரியவந்தது. சில பெண்களுடன் ஆபாசமாக இருந்து கொண்டு மாணவி ஒருவருடன் வீடியோ காலில் பேசியதற்கான ஆதாரங்களையும் சிபிசிஐடி கைப்பற்றினர். ஆபாசமாக மாணவிகளுடன் உரையாட பயன்படுத்திய யாஹூ இ-மெயில் கணக்கை சிபிசிஐடி போலீசார் முடக்கினர்.