நமது ‘சிற்ப இலக்கணம்’ தொடரில் இதுவரை, 24 வகையான தொழிற் கை முத்திரைகள் எவை என்று சுருக்கமாகவும், அவற்றில் முதல் 4 முத்திரைகளை விளக்கமாகவும் கண்டோம். மீதமுள்ள முத்திரைகள் குறித்து தொடர்ந்து காண்போம்…
5.வியாக்கியான முத்திரை.
சின் முத்திரை என்பது இதன் மறு பெயர்.
இம்முத்திரையின் போது கையின் பெருவிரல் கைத்தலத்தை விட்டு பிரிந்து முன்னோக்கி நீண்டு நிற்க. சுட்டு விரலானது வணங்கி பெருலிரலின் நுனியைத் தொட்டு வளையம் போன்று அமையும். நடுவிரல், சிறுவிரல், அணி விரல் இம்மூன்றும் மேல்நோக்கி இருக்கும். ஞானாசிரியர்கள் தத்துவ விளக்கத்தைப் போதிக்கும் முத்திரை இதுவாகும்.
வியாக்கியானம் என்றால் விதர்க்கம் என்று பொருள். ஆணவம், மாயை, கன்மம், போன்ற மூன்று மலங்களிலிருத்தது விடுபட்டு ஜீவாத்மா பரமாத்மாவை சரணடைதலே முக்தி பேறு அடையும் வழி என்பதை உணர்த்துவதே இந்த முத்திரையின் நோக்கம் ஆகும். ஆலமர் செல்வனாகிய தஷிணாமூர்த்தி இந்த முத்திரையுடன்தான் இருப்பார்.
வியாக்கியான அதாவது சின் முத்திரை அமைக்கும் தஷிணாமூர்த்தி படிமம்.
6. சூசி முத்திரை.
கடகமுத்திரையில் சுட்டுவிரலை செங்குத்தாக நிறுத்துவது சூசி ஹஸ்தம் ( ஊசி அல்லது சுட்டுக்கை) ஆகும். இது ஒரு பொருளை சுட்டிக்காட்டும் வடிவிலானது.
’உள்ளேதான் எம்பெருமான் இருக்கிறார்’ – என்று துவாரபாலகர் நமக்கு சுட்டிக் காட்டுவதும் இவ்வகை முத்திரையே. கலைமகளும் இம்முத்திரையுடன் அமைவது உண்டு.
கூத்தாடும் ஞானசம்பந்தர் படிமத்தில் இம்முத்திரையைக் காணலாம். காலசம்ஹார மற்றும் கஜ சம்ஹார மூர்த்தத்திலும் சூசி முத்திரை இடம் பெறும்.
சுட்டுதல்… அச்சத்திலிருந்து அபயம் அளித்தல் என்ற பொருளில் அமையும் முத்திரை இதுவாகும்.
7. தர்ஜனீ முத்திரை.
சூசி முத்திரையை ஒத்த அமைப்பு. சுட்டுவிரலும் கைத்தலமும் சிறிது பின்னடங்கி சாய்ந்து அச்சுறுத்தும் தன்மையை உணர்த்தும். தர்ஜனீ என்றால் அச்சுறுத்தல் அல்லது எச்சரிக்கை செய்தல் என்னும் பொருள்படும். துவாரபாலகர் படிமங்களில் இம்முத்திரைக் காணலாம்.
உள்ளே இருப்பவர் சக்தி வாய்ந்தவர். மனதில் எந்த ஒரு குற்றமும் இல்லாமல் எச்சரிக்கையுடன் சென்று தரிசனம் செய்யுங்கள் என்று தர்ஜனீ முத்திரையுடன் துவாரபாலகர்.
8. கர்த்தரி முக முத்திரை.
கர்த்தரிக்கோல் போல் அமையும் முத்திரை இதுவாகும். ஆயுதங்களை செங்குத்தாக பிடிக்க இம்முத்திரை அமைக்கப்படுகிறது.
அணிவிரலும் பெருவிரலும் உள்ளங்கையில் முன்புறத்தே நெருங்கி அமைய சிறு விரலானது தன்னித்தில் செங்குத்தாக நிமிர்ந்து அல்லது சிறிது வளைந்து இருக்கும். சுட்டு விரலும் நடுவிரலும் செங்குத்தாக நேரே நிமிர்ந்து நடுவிரல் முன்னோக்கியும் சுட்டு விரல் பின்னோக்கியும் விரிந்து கத்திரிகோலின் அலகுகள் போல அமையும்.
சில வகை ஆயுதங்களை அழகுற தூக்கி நிறுத்திப் பிடிக்கப் பயன்படும் முத்திரை இது. கடவுள் படிமங்களில் மேற்புறக்கையில் இம்முத்திரை இருக்கும். கத்திரி அலகுகளுக்கிடையே ஆயுதம் பக்கவாட்டில் அமைந்து இயங்கும், இதே முத்திரை பாவனையுடன் இருந்தால் பிரயோகமுத்திரை எனப்படும்.
தொடரும்…
– மா.மாரிராஜன்