இதுவரை தொழிற் கை அமைக்கும் 24 முத்திரைகளைப் பார்த்தோம்..
நமது சிற்ப இலக்கணம் தொடரில், இதுவரை 24 வகை தொழிற்கை முத்திரைகளைப் பார்த்தோம்… அடுத்தது 4 வகையான எழிற்கை முத்திரைகள் குறித்து பார்க்க உள்ளோம்.
அவை,
1. கஜ ஹஸ்தம்
2.தண்ட ஹஸ்தம்.
3.டோல ஹஸ்தம்.
4. பிரசாரித ஹஸ்தம்.
இம்முத்திரைகள் எழிற் கை முத்திரை என்று அழைக்கப்படும்.
இவை ஒரு அழகு மற்றும் சிற்ப அமைதிக்காக படிமங்களில் அமையும். ஒவ்வொரு எழிற்கை முத்திரையையும் விரிவாகப் பார்ப்போம்.
1. கஜ ஹஸ்தம்:
கையை நேராக நீட்டி, மணிக்கட்டில் கைத்தலத்தைக் கீழ்நோக்கிச் சரித்து, தளிர்க்கை போல் விரல்களை அமைத்து, கம்பீரமாகப் பிடிக்கும் கையானது கஜ ஹஸ்தம் (தும்பிக்கை முத்திரை) எனப்படும்.
இதனை ‘கரி ஹஸ்தம்’ என்றும் சொல்வதுண்டு. கஜ ஹஸ்தத்தை ஆடவல்லான் படிமத்தில் காணலாம்.
2. தண்ட ஹஸ்தம்:
கஜ ஹஸ்தத்தை முன்னோக்கி நீட்டியவாறு அமைப்பது தண்ட ஹஸ்தம் எனப்படும்.
இக்கையானது அமர்ந்த கோலத்தில் உள்ள படிமத்தில், மடக்கி நிறுத்திய முழங்கால் மீது மணிக்கட்டை வைத்த நிலையில் அமையும். இதனை அய்யனார் படிமத்திலும், பிற யோக, தியானக் கோலப் படிமங்களிலும் காணலாம்.
3.டோல அஸ்தம்
ஒடிந்த அறாக் கிளை மரத்தில் தொங்கி நிற்கிற நிலையைப் போலத் தோளிலிருந்து நீட்டப் பெற்றுத் தொங்கியமையும் கை அமைதி ‘டோல ஹஸ்தம்’ எனப்படும். லோலகரம், லம்பகரம் ஆகிய பிற பெயர்களும் இதற்கு உண்டு. விரல்கள் பல்லவ முத்திரையில் கண்டவாறு அமைந்து விளங்கும்.
பெண் படிமங்களில் இக்கரத்தைச் சிறப்பாகக் காணலாம்.
4. பிரசாரித ஹஸ்தம்:
புயத்தை நேராக நீட்டி, கைத்தலத்தையும் விரல்களையும் பல்லவ முத்திரையுடன் கூடியதாக அமைத்து விளங்கும் கையமைதி பிரசாரித ஹஸ்தம் எனப்படும். இதனை சயனக் கோல விஷ்ணு படிமத்தில் காணலாம். மேலும், கூத்தாடும் விநாயகர், கண்ணன், கந்தன், சம்பந்தர் படிமங்களில் எழிலுக்காக நீட்டிப் பிடிக்கப்படும் கை அமைதியாகவும் காணலாம். இதனைத் தமிழில் வீசிய கரம் என்றும், நாட்டியக் கரம் என்றும் கூறுவர்.
தொடரும்…
- மா.மாரிராஜன்