நமது நிருபர்
நடிகர் விக்ரம், துருவ் விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வரும் ’சியான் 60’ படத்தில் பாபி சிம்ஹா இணைய உள்ளார்.
நடிகர் விக்ரம் தனது 60ஆவது படத்தில் தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடிக்கிறார். பெயரிடப்படாமல் தொடங்கப்பட்டு தற்போது ‘சியான் 60’ என்று அழைக்கப்படும் இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார்.
சிம்ரன், வாணி போஜன் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். முதலில் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக இருந்தது பின்னர் சமீபத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பதாக மாற்றி அறிவிக்கப்பட்டது. சியான் 60 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.
இந்நிலையில் தனது பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட படங்களில் நடித்தவரும், நெருங்கிய நண்பருமான பாபி சிம்ஹா சியான் 60 படத்திலும் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கார்த்திக் சுப்பராஜ் டுவிட்டரில் தற்போது அறிவித்து உள்ளார்.
அமைதியாகத் தொடங்கிய சியான் 60 குறித்த அப்டேட்கள் சிம்ஹாவின் வரவு குறித்த இந்த அறிவிப்பால் சூடு பிடித்துள்ளன. ‘ஏதோ வித்தியாசமான கேரக்டர் இருக்கும்’ என்று இந்த டுவிட்டரின் கமெண்ட் பகுதியில் ரசிகர்கள் தங்கள் யூகத்தை வெளியிடுகின்றனர்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா படத்தில் வில்லனாக நடித்த பாபி சிம்ஹா அதற்காக தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.