சாத்தான்குளம் தந்தை ,மகன் படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் ஜாமீன் வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் (ஜெயராஜ், பென்னிக்ஸ்) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படுகொலை வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்த நிலையில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் காவலர் ரகு கணேஷ் , காவல் ஆய்வாளரான ஸ்ரீதர் தரப்பில் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த நிலையில் மேற்கண்ட இரண்டு மனுக்களும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வினீத் சரண் மற்றும் தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது காவலர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ‘ஓராண்டு காலமாக சிறையில் இருக்கும் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் ரகு கணேஷ் ஆகியோரின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும். காவல்துறையினர் தாக்கியதால் தான் சாத்தான்குளம் தந்தை , மகன் உயிரிழக்கவில்லை. அவர்கள் வீசிங் மற்றும் இதயத்தில் ஏற்பட்ட சிக்கலினால் தான் இறந்தார்கள். மருத்துவமனை செல்லும் வழியில்தான் அவர்கள் இறந்தனர். இவ்வழக்கில் வெளிப்படையான தன்மை இல்லை. எனவே வழக்கு விசாரணையை சில காலம் ஒத்திவைக்க வேண்டும்’, என வாதிடப்பட்டது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தந்தை , மகன் குடும்பத்தார் தரப்பு வாதத்தில், ‘இவ்விவகாரத்தில், காவல் நிலையத்தில் பணிபுரிந்த இரு பெண் அதிகாரிகளே இவர்களுக்கு எதிராக வாக்குமூலம் அளித்துள்ளனர். இருப்பினும் அவர்கள் இன்னும் நீதிமன்றத்தால் குறுக்கு விசாரணை செய்யப்படவில்லை.
அவர்கள் விசாரிக்கப்படும் வரையில், இவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது. இரண்டு காவலர்களுக்கும் ஜாமீன் வழங்கினால் அவர்கள் உயிருக்கு கூட ஆபத்து ஏற்படலாம். எனவே அவர்களது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என தெரிவித்தனர்.
இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் உத்தரவில் மனுதாரர்களிடம், ‘நீங்கள் எதுவும் செய்யவில்லை எனில், அவர்கள் ஏன் கஸ்டடியிலிருந்து விடுவிக்கப்படவில்லை? அவர்கள் உடலில் காயம் இருந்ததாக கூறும் பிரேத பரிசோதனையின் பின்னணி என்ன? அவர்களை யார் காயப்படுத்தினார்கள்?’ என்ற அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர். மேலும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் ஜாமீன் வழங்க முடியாது என தெரிவித்தனர்.