சங்கராபரணி முதல் தென்பெண்ணை வரை – நூல் மதிப்புரை

SHARE

னிதன் தனது தொடக்கத்தை அறிந்து கொள்வதில் அளவில்லாத ஆவல் உள்ளவன். பழமையின் செம்மை நிகழ் காலத்தின் நம்பிக்கையை அதிகரிக்கக்  கூடியது. தேடல் உள்ளவர்களுக்கே  வாழ்க்கை உயிர்ப்பாய் நகரும்.

விழுப்புரம் கோ.செங்குட்டுவன்  அவர்களின் இந்நூல் அவரது நேரடிக் கள ஆய்வுப் பயணத்தின் விளைவு. தீராத வேட்கையில்  வரலாற்று தடயங்களை தேடிச் சென்றுள்ளார். இந்த பயணம் சங்கராபரணி ஆற்றங்கரையில் தொடங்கி கெடிலம் பம்பை ஆறுகளை ஊடறுத்து தென்பெண்ணை ஆறு வரை நீள்கிறது.

நூலின் முன்னுரையில் நமது முன்னோடி பயண எழுத்தாளர்களான,  நரசிம்மலு நாயுடு (ஆரிய திவ்ய தேச சரிதம்),  த.சுப்பிரமணிய பிள்ளை  (சிவஸ்தல மஞ்சரி), டி.பி. தாஸ் ராவ் (இந்திய ஸ்தல யாத்திரை மான்மியம்), பயண இலக்கியங்களின் தந்தை ஏ.கே.செட்டியார் (தமிழ்நாடு பயணக் கட்டுரை),  சாமிநாத சர்மா  (எனது பர்மா நடைவழிப் பயணம்) –  என நிறைய ஆளுமைகளை குறிப்புகளுடன் நினைவு கூர்கிறார்.

இந்த வரலாற்றுப் பயணத்தில் அவர் தேடிச் சென்ற இடங்களின் அரிய பொங்கிஷங்களை அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார். கூடவே துறைச்சார் நிபுணர்களின் ஆய்வுக் குறிப்புகளையும், தொல்லியல் தரவுகளையும் பொருத்தமாகத் தந்திருக்கிறார்.

அதே சமயம் அந்த இடங்கள் எந்த லட்சணத்தில் பராமரிக்கப்படுகின்றன என்பதையும் கூறி,  அவை கேட்பாரற்று நிர்கதியாய்  காலத்தின் மாயத்தில் கரைந்து மறைந்து போகும் அபாயத்தில் உள்ளதையும்  எச்சரிக்கை செய்கிறார்.

அந்த பகுதி மக்களுக்கு அந்த ஊர்களின் வரலாற்று தடயத்தினை இனம் காட்டுவதுடன் அந்த நினைவு சின்னங்கள் மீதான வியப்பையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறார்.

இந்நூலில் குறிப்பிட்ட அனைத்து செய்திகளும் மதிப்புமிக்கவை. உங்கள் ஆர்வத்தை தூண்ட ஒரு சில பகுதிகளைப் பற்றி மட்டும் சுருக்கமாக பேசுவோம்..,

பிள்ளையார்பட்டி விநாயகரின் முதன்மைக்கு போட்டியான கருத்தாக தமிழகத்தில் உள்ள பிள்ளையார் சிற்பங்களிலே முதன்மையானது “ஆலகிராமப் பிள்ளையார் ” என சான்றுடன் கூறுகிறார்.

கடையெழு வள்ளல்களில் எட்டாவது வள்ளல் ஒய்மா நல்லியக்கோடன் மாவிலங்கை என்ற ஊரைச் சேர்ந்தவர் என்பது எனக்கு புதிய தகவல்.

புதுவை கடற்கரையும்  அங்குள்ள மகாத்மா காந்தி சிலையும் யாவரும் அறிந்த ஒன்று. ஆனால் அங்கிருக்கும் தூண்கள்  பிரெஞ்சு ஆட்சியின் ஆளுநர்

டியூப்ளேவால் கொண்டு வரப்பட்டதாம் … எங்கிருந்து தெரியுமா..? செஞ்சி வேங்கடரமணர் கோவிலில் இருந்து..! 

“ஷுட்டிங் ஓடை “என்று அழைக்கப்படும் பொம்மையர் பாளையம் ( வானூர் வட்டம் ) ஒடையில் 2003. ல் ஒரு அகழாய்வு..,அதில் இரண்டு லட்சம் ஆண்டுகள் (0.187 மில்லியன் ஆண்டுகள்) பழமையான ஒரு குழந்தையின் மண்டை ஓடு கண்டெடுக்கப்படுகிறது. இது 1,87, 000 ஆண்டுகளுக்கு முன்னரே உலகில் மனிதன் முதன் முதலாக வாழ்ந்த இடங்களில் ஒன்றாக புதுச்சேரியை அடையாளப்படுத்தி  உள்ளது – உண்மையில் இச்செய்தி நிறைய பேருக்கு தெரியாது. இந்நூலை படிக்கும் வரை எனக்கும் தான்.

தென்னிந்தியாவின் இரண்டாவது பெரிய சதுப்பு நிலமான (கழு வெளி) மரக்காணத்தை (சோபட்டிணம் /எயிற்பட்டிணம் ) பற்றிய வரலாறும் சூழல் அக்கறையும் கலந்த பயணக் கட்டுரை நிறைய செய்திகளையும் சிந்தனைகளையும் தருகிறது.

வரலாற்றுத் தடயங்கள் மிகுந்த, அகழாய்வுக்கு உரிய நிலப்பகுதி நத்தம் (முதுமக்கள் தாழி நிறைந்த பகுதி) எப்படித் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டது? – என்கிற எழுத்தாளரின் சமூக சீற்றமும் முன்னெடுப்பும் வியப்புக்குரியது.

வழுதாவூர் கோட்டைமேடு என்கிற வரலாற்று சிறப்பிடம்  புதுச்சேரியுடன் மிகுந்த தொடர்புடையது.  ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்பை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட  எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் வானம் வசப்படும்,  மானுடம் வெல்லும் போன்ற புதினங்களின் கதைக் களத்திலும் கூட வழுதாவூர் கோட்டைமேடு காட்சிகள் நிறைய இடங்களில் வருகிறது. ஆனால் அவ்விடங்கள் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இல்லாதது வருத்தமும் அதிர்ச்சியையும் தருகிறது.

எஸ்.மேட்டுப்பாளையத்தில் முதுமக்கள் தாழிகளையும் பானை ஓடுகளையும் சேகரிக்கும் போது ஒரு சடலம் ஒன்று அருகிலேயே எரியூட்டப்படுகிறது. இதை அருமையான மொழி நடையில் சிறுகதைப் போல் விவரித்ததுள்ளது சுவாரஸ்யம்.

 திருபுவனை சன்னியாசிக் குப்பம் சாராயக்கடை அருகில் கேட்பாரற்ற நிலையில் மிகப் பிரமாண்டமான புராதான கல் நந்தி ஒன்று உள்ளது.  இது தஞ்சை பெருவுடையார் கோவில் எதிரே வைப்பதற்காக இராஜராஜ சோழனால் கொண்டு போகும் போது வழியிலேயே தடைப்பட்டது பற்றி நிறைய தகவல்களையும் தருகிறார். எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கள் இது பற்றி “கவிழ்ந்த காணிக்கை” என்ற நாவல் எழுதியதையும் சுட்டிக் காட்டுகிறார்.

தமிழக வரலாற்று ஆவணங்கள் என்பது 4ல் 3 பகுதிகள் கோவிலை ஒட்டியவை தான். கோவில் இல்லாமல் தமிழ் பண்பாட்டையோ கலாச்சாரத்தையோ அறிந்து கொள்ள முடியாது.  பெரும்பாலும் ஒவ்வொரு ஊரின் வரலாறும் கோவிலில் இருந்தே தான்  தொடங்குகிறது.  

கோவிலைச் சார்ந்து தான் மக்களின் வாழ்வியல் இருந்தது. மக்களின் வரலாற்று பதிவறைகளாக கோவில்கள் இயங்கி வந்தன என்பதற்கு தொல்லியல் அகழாய்வுகள், கல்வெட்டுகள், செப்பு பட்டயங்கள், இலக்கியங்கள் என சான்றுகள் வரிசை கட்டுகின்றன.

விழுப்புரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் நிறைய வரலாற்றுத் தடயங்கள் நிறைந்தவை என்பதை நூலாசிரியர் தனது கள ஆய்வு பயணத்தின் வழியே நிருபித்துள்ளார்.

மேலும், ஏதோ சுற்றினோம், எழுதினோம், குறை சொன்னோம் என்றில்லாமல்🙂 பத்திரிகை செய்தி வாயிலாக ஆவணப்படுத்துவது, தமிழக சட்டப்பேரவையில் கேள்வி கேட்க வைப்பது, மாவட்ட ஆட்சியர்களை உசுப்பி விடுவது, புகார் தருவது, கோரிக்கை விடுத்து அதை பின் தொடர்வது, சட்ட முன்னெடுப்பு  போன்ற தொடர் செயல்கள் மூலம் பூனைக்கு அசையும் மணியைக் கட்டியுள்ளார்.  அதன் மணியோசை  சில இடங்களில் சிலரை திரும்பி பார்க்க வைத்துள்ளது. 

இந்த அசாத்தியமான பயணத்தின் மூலம் பல அரிய விஷயங்கள் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. அதற்காக விழுப்புரம் கோ.செங்குட்டுவன் அவர்களுக்கு  எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

இந்நூல் ஊர் சுற்றிகளுக்கு ஒரு வழிகாட்டி. எழுத்தாளர்களுக்கு தகவல் களஞ்சியம், ஆய்வாளர்களுக்கு ஒரு தேர்ந்த கையேடு, வாசகர்களுக்கு தங்கள் சேகரிப்பில் தவறவிடக் கூடாத ஒரு முக்கிய புத்தகம்.

முதற்பதிப்பு : டிசம்பர் 2020

வெளியீடு : பி.எஸ். பப்ளிகேஷன்ஸ்

பக்கங்கள்: 223

விலை: ரூ.200

பதிப்பக தொடர்பு எண்: 9944622046

–  மஞ்சுநாத்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ’கர்னலின் நாற்காலி’ – நூல் மதிப்புரை.

சு.சேதுராமலிங்கம் எழுதிய பிரபாகரன் சட்டகம் – நூல் அறிமுகம்

தமிழகத்தை அதிர வைத்த ‘சோளகர் தொட்டி’ – நாவல் மதிப்புரை

சுப. உதயகுமாரன் எழுதிய ‘பச்சை தமிழ்த் தேசியம்’ – நூல் மதிப்புரை:

‘மு.க.ஸ்டாலின் பரிசளித்த புத்தகம்’ கூகுளில் தேடும் இளைஞர் பட்டாளம்

Admin

வேர்ச்சொற் கட்டுரைகள் – நூல் அறிமுகம்…

வெளியானது மன்னர் மன்னன் எழுதிய ‘இராஜராஜசோழன்’ நூல்…

கோவி.லெனின் எழுதிய ’வி.பி.சிங் 100’ – நூல் மதிப்புரை

எஸ்.ராமகிருஷ்ணனின் ‘காட்சிகளுக்கு அப்பால்’ – நூல் மதிப்புரை.

தமிழ்த்தேச அரசியல் போராட்டம் – நூல் மதிப்புரை

ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி எழுதிய சூதாடி – நூல் அறிமுகம்

யெஸ்.பாலபாரதி நூலுக்கு பாலபுரஸ்கார் விருது… முதல்வர் வாழ்த்து

Admin

Leave a Comment