ஆப்கானிஸ்தானில் மேலும் ஒரு பகுதியை தலிபான்கள் நேற்று கைப்பற்றினர். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் அரசு படைகளுக்கும்,தலிபான் பயங்கரவாதிகளுக்கும் பல வருடமாக போர் நடந்து வருகிறது.
அமெரிக்க படைகள் ஆப்கனில் ராணுவ தளம் அமைத்து, அந்நாட்டு அரசுக்கு பயிற்சி அளித்து வந்ததோடு, தலிபான்களுக்கு எதிராக சண்டையிட்டு வந்தன.
இந்த நிலையில் அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த சமரச பேச்சை அடுத்து, ஆப்கனில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெற சம்மதித்தன.இதுவரை 95 சதவீத அமெரிக்க படைகள் திரும்பி வந்துள்ள நிலையில் தலிபான்கள் தங்களின் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு மாகாணத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர்.தற்போது குந்தூஸ், சர்-இ போல் ஆகிய இரண்டு மாகாணங்களையும் கைப்பற்றிவிட்டோம் என தலிபான் தெரிவித்துள்ளது. அதேவேளையில் தலிபான் கைப்பற்றியதாக கூறும் செய்தியை அரசு மறுத்துள்ளது.
இந்தநிலையில் காங்கிரசை சேர்ந்த ஜெய்வீர் ஷெர்கில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று கடிதம் எழுதினார்.அந்த கடிதத்தில் அமெரிக்க படைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பின் ஆப்கானிஸ்தானில் போர் மூண்டுள்ளது. அந்த நாடு மீண்டும் பயங்கரவாதிகளின் பிடிக்குள் சென்றுவிட்டது.
எனவே ஆப்கனில் வசிக்கும் சிறுபான்மை ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்களை உடனடியாக இந்தியா அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.