ஊரடங்கு விதிகளை மீறி, வெளியே வந்து காவல்துறையினரோடு ரகளை செய்த பெண் வழக்கறிஞரின் ஜாமீன் மனுக்களை, சென்னை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊரடங்கு விதிகளை மீறிய வழக்கறிஞர் தனுஜா மற்றும் அவரது மகள் இருவரும் சென்னை சேத்துபட்டு போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளை தகாத வகையில் பேசி வாக்குவாதம் செய்தத காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதனால் வழக்கறிஞர் தனுஜா ராஜன் மற்றும் அவருடைய மகள் பிரீத்தி மீது, ’பணி செய்யவிடாமல் தடுத்தல்’, ‘கொலை மிரட்டல் விடுத்தல்’ உள்ளிட்ட 6 சட்டப் பிரிவுகளின் கீழ் போலீசார்வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி இருவருக்கும் போலீஸார் சம்மன் அனுப்பினர். இந்த நிலையில் நேற்று இவர்கள் முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ’வழக்கறிஞரின் செயல்பாடு சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆகவே இதுபோன்ற சம்பவத்தில் முன்ஜாமீன் வழங்கினால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்’ எனக் கூறி, இருவரின் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
- மூவேந்தன்