பி.எம்.கேர் நிதியில் இருந்து மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு வழங்கப்பட்ட வெண்டிலேட்டர்களில் சுமார் 250 வெண்டிலேட்டர்கள் இயங்காதது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா 2ஆவது அலை நாட்டையே உலுக்கி வரும் நிலையில், மத்திய அரசின் பி.எம்.கேர் நிதியில் இருந்து மாநிலங்களுக்கு பல மருத்துவ உபகரணங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதில் மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட வெண்டிலேட்டர்களில் சுமார் 250 வெண்டிலேட்டர்கள் பழுது காரணமாக இயங்கவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.
பி.எம்.கேர் நிதியில் இருந்து முதற்கட்டமாக 262 வெண்டிலேட்டர்கள், இரண்டாவது கட்டமாக 590 வெண்டிலேட்டர்கள் என 1352 வெண்டிலேட்டர்கள் வழங்கப்பட்ட நிலையில், 862 வெண்டிலேட்டர்கள் மட்டுமே செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதுபோல முன்னதாக பஞ்சாப் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட 320 வெண்டிலேட்டர்களில் குறைந்தது 237 வெண்டிலேட்டர்கள் பழுதானவை என்று அங்குள்ள 3 மருத்துவக் கல்லூரிகளின் தலைவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்த வெண்டிலேட்டர்கள் சரி செய்யப்பட்டாலும் அவற்றை நம்பிப் பயன்படுத்த முடியுமா எனத் தெரியவில்லை என்றும் பல மருத்துவர்கள் சந்தேகம் தெரிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. வெண்டிலேட்டர்கள் வாங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாகவும், மத்தியில் ஆளும் பாஜக அரசு மக்களின் உயிரோடு விளையாடுவதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த மே 15 அன்று பிரதமர் மோடி, மத்திய அரசு அனுப்பிய வெண்டிலேட்டர்களை மாநில அரசுகள் முறையாகப் பயன்படுத்துகின்றனவா?-என்று ஆய்வு செய்யக் குழுவை அனுப்பினார் என்பது குறிப்பிடத் தக்கது.
- கெளசல்யா அருண்