தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவடைந்து உள்ளது. 4,867 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று மதியம் 3 மணியுடன் நிறைவடைந்தது.
இரண்டு பெரிய கூட்டணிகள் உட்பட ஒவ்வொரு தொகுதியிலும் ஐந்து முனைப் போட்டி நிலவுகின்றது. இந்த முறை வேட்பு மனுவில் அதிக கேள்விகள் இருந்ததாலும், தவறான தகவல்களைக் கொடுத்தால் வேட்புமனு தள்ளுபடியாகலாம் என்பதாலும் பலர் இரண்டுக்கும் மேற்பட்ட வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்து உள்ளனர்.
ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் போது அவற்றில் எது சரியாக உள்ளதோ அந்த வேட்பு மனு ஏற்கப்படும் – என்ற விதியின் காரணமாகவே இப்படி நிறைய வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இன்று மதியம் 3 மணிக்கு வேட்பு மனுத் தாக்கலுக்கான கெடு நிறைவடைந்தது. அப்போது தமிழகம் முழுவதிலும் மொத்தம் 4,867 வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்து உள்ளதாகவும். கரூர் தொகுதியில் 74 பேர் வேட்புமனு தாக்கல் செய்ததுதான் அதிக பட்ச எண்ணிக்கை – என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
இவற்றில் தகுதியற்றவை, தவறாகப் பூர்த்தி செய்யப்பட்டவை, ஒன்றுக்கும் அதிகமாகப் பூர்த்தி செய்யப்பட்டவை, திரும்பப் பெறப்பட்டவை போக மீதமுள்ள இறுதி வேட்பாளர் பட்டியல் மார்ச் 22ஆம் தேதி மாலை வெளியிடப்படும்.