இந்தியாவின் விளையாட்டு வரலாற்றில் மிக நீண்ட காலத்திற்குப் பின்பு கிடைத்த முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் நீரஜ் சோப்ராவின் தங்கப் பதக்கம். சுதந்திர இந்தியாவின் முதல் ஒலிம்பிக் தங்கமும் அதுதான்.
இதனால் டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இருந்து திரும்பிய பின்னர் நீரஜ் சோப்ராவுக்கு நிறைய மரியாதைகள் செய்யப்பட்டன. பல முக்கிய நிகழ்ச்சிகளுக்கு அவர் அழைக்கப்பட்டார்.
இவற்றை வெளியில் இருந்து பார்க்கும் போது நீரஜ் சோப்ராவுக்கு சந்தோஷம் தரும் செயல்களாகத் தோன்றினாலும் உண்மை அப்படி இல்லை!. இந்த அமளிகளால் தனது விளையாட்டுப் பயிற்சி தடைபட்டு உள்ளதாக நீரஜ் ஒரு பேட்டியில் கூறி உள்ளது ஊடகங்களையும் மக்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் நீரஜ் சோப்ரா, “ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பின்னர் இந்த மாத இறுதியில் நடக்கும் டைமண்ட் லீக் போட்டிகளில் பங்கேற்க இருந்தேன். ஆனால் தொடர் பாராட்டு நிகழ்ச்சிகளால் விளையாட்டுப் பயிற்சியில் என்னால் பங்கேற்க இயலவில்லை. எனது உடல்நலமும் பாதிக்கப்பட்டது, இதனால் எனது உடல் தகுதி குறைந்துள்ளதாக நான் கருதுகிறேன். முழு திறனோடு இல்லை என்பதால் நான் டைமண்ட் லீக் போட்டியில் இருந்து விலகியும்விட்டேன்.
ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற மற்ற நாட்டினர் அனைவரும் டயமண்ட் லீக் போட்டியில் பங்கேற்கின்றனர். இந்தியாவில் இந்த நிலை மாற வேண்டும். நாம் ஒரெ ஒரு தங்கப் பதக்கத்தோடு திருப்தி அடையக் கூடாது” – என்று கூறி உள்ளார்.
ஒரு விளையாட்டு வீரராக அவர் கூறிய கருத்துகள் மிகச் சரியானவை என்பதை இந்தக் கருத்துக்குக் கிடைக்கும் பின்னூட்டங்கள் காட்டுகின்றன.