ஐபிஎல் தொடரின் 17ஆவது போட்டி சேப்பாக்கத்தில் நேற்று நடந்தது. இதில் மும்பை இண்டியன்ஸ் அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. பஞ்சாப் அணிகள் 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
சேப்பாக்கம், சென்னை
டாஸ் வென்ற பஞ்சாப் அணி பெளலிங்கை தேர்வு செய்தது. பஞ்சாப் அணி, முருகன் அஷ்வினுக்கு மாற்றாக ரவி பிஷ்னோய்யை இந்த போட்டியில் களம் இறக்கியுள்ளனர்.
ஆரம்பம் முதலே தடுமாறியது மும்பை இண்டியன்ஸ் அணி. டிகாக் மற்றும் ரோஹித் தொடக்க ஆட்டக்காரர்களாக வந்தனர். ஆட்டத்தின் 2ஆவது ஓவரிலேயே ஹூடாவின் பந்தில், டிகாக்கின் விக்கெட் போனது. அடுத்து சூர்யகுமார் வருவார் என்று பார்த்தால், மிடில் ஆர்டர் பிளேயர் ஆன கிஷன் வந்தார். சரி கிஷனுன், ரோஷித்தும் அடித்து ஆடுவார்கள் என்று எதிர்ப்பார்த்தால், சிங்கிள் எடுக்கவே திணறியது மும்பை. பவர்பிளே ஓவர்களில் மொத்தமே 21 ரன்கள்தான் எடுத்தது. இந்த ஐபிஎல் லீக் போட்டியின் குறைந்த பவர்பிளே ஸ்கோர் இதுதான். சரி பவர்பிளேவில் அடக்கி வாசிக்கிறார்கள், இனி தான் ஆட்டம் களை கட்டும் என்று பார்த்தால், அடுத்த ஓவரிலேயே பிஷ்னோய்யின் பந்தில் கேட்ச் ஆகி அவுட்டானார் கிஷன். என்னடா நடக்குது என்பது போல் இருந்தது மும்பை ரசிகர்களுக்கு. அடுத்து வந்த சூர்யகுமார், ரோஷித் கூட்டணி நல்ல பலன் கொடுத்தது. இருவரும் மிட் விக்கெட், லாங் ஆன் திசைகளில் பவுண்டரி, சிக்ஸர் என அடித்து ஆடி, ஃபார்ட்னர்ஷிப்பில் 78 ரன்கள் எடுத்தனர். ரோஷித்தும் தன்னுடைய 40ஆவது அரை சதத்தை எடுத்தார். அடுத்து விக்கெட் எடுக்க வேண்டும் என்பதற்காகவே வந்தார் பிஷ்னோய். அதே போல் சூர்யகுமாரின் விக்கெட் போனது, 33 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்த ஓவரிலேயே யாக்கர் ஸ்பெஷலிஸ்ட் ஆன ஷமியின் பந்தில் அடித்து ஆட வேண்டும் என்று முயற்சி செய்தார் ரோஷித், ஆனால் ஃபுல் டாஸ் பந்தை டீப் ஸ்கொயர் பக்கம் தூக்கி அடித்து ஆலனிடம் கேட்ச் போனது. அடுத்து ஹர்திக், பொலார்ட், க்ருணால் என்று கடைசி 2 ஓவரில் 3 விக்கெட் போனது. இறுதியில் 20 ஓவரில் 131 ரன்கள் மட்டுமே எடுத்தது மும்பை இண்டியன்ஸ்.
ஜெயித்தே தீர வேண்டும் என்றே ஆட வந்தனர் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேஎல் ராகுல் மற்றும் மயாங் அகர்வால். முதல் ஓவரில் சற்று தடுமாறிய வீரர்கள், இரண்டாவது ஓவரில் க்ருணாலின் பந்தில், கேஎல்ராகுல் மிட் விக்கெட்டில் 2 பவுண்டரி, அகர்வால் 1 சிக்ஸர் என 2 வது ஓவரில் மட்டும் 15 ரன்கள் எடுத்தார்கள். அடுத்து பும்ரா போட்ட ஷாட் பாலிலும் 1 சிக்ஸர், அடுத்து வந்த போல்ட்டின் ஃபுல் டாஸ் பந்திலும் 2 பவுண்டரிகள், பவர்பிளே ஓவரின் கடைசி பந்தில் அகர்வாலின் 1 பவுண்டரி என பவர் பிளே ஒவர்களில் 45 ரன்கள் எடுத்து சிறப்பான தொடக்கம் தந்தனர். இவர்களது ஃபார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களை தாண்டியது. ஆனால் அகர்வாலின் ஆட்டம் லெக் ஸ்பின்னரான ராகுல் சஹாரின் பந்தில் விக்கெட்டானது.
அடுத்து கெயிலை மலை போல் நம்பினார்கள் பஞ்சாப் ரசிகர்கள், நம்பிக்கையை காப்பாற்றினார் கெயில். பஞ்சாப். கேஎல் ராகுலும், கெயிலும் எந்த பந்துகளுக்கு பவுண்டரி அடிக்க வேண்டும், எந்த பந்துகளுக்கு சிங்கிள் எடுக்க வேண்டும் என தெளிவாகவே விளையாடினார்கள். இதனால் கேஎல் ராகுல் தன்னுடைய அரை சதத்தை எடுத்தார். இவர்களது ஃபார்ட்னர்ஷிப்பும் 40 ரன்கள் வந்தது. ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரி, சிக்ஸர் என பறந்தது. இறுதியில் 18 ஓவர் முடிய 2 பந்துகள் மீதம் இருந்த நிலையில் கெயில் 1 சிக்ஸர், கேஎல் ராகுல் ஃபுல் டாஸ் பந்தில் 1 சிக்ஸில் ஆட்டத்தை முடித்து வெற்றி பெற்றது பஞ்சாப் அணி.
பஞ்சாப் அணியின் ஃபீல்டிங், முந்தைய ஆட்டங்களை விட சிறப்பாக செய்தார்கள். கேஎல் ராகுல் ஒவ்வொரு ஓவரிலும் மாற்றங்களை கொண்டு வந்து, பந்து வீச்சாளர்களையும், ஃபீல்டிங் வீரர்களையும் ஊக்குவித்துக் கொண்டிருந்தார். இதன் பலன் தான் மும்பை அணி சிங்கிள்ஸ் எடுக்கவே திணறியது. மும்பை அணி ஆட்டத்தின் இடையிலேயே தோல்வியை ஏற்றுக் கொண்டது போல் தான் விளையாடியது. இறுதி வரை போராடும் எண்ணம் இல்லாமல் விளையாடுவது போல் இருந்தது.
சொல்லப்போனால், நேற்றைய விளையாட்டில், மும்பை அணி பஞ்சாப் அணியை போலவும், பஞ்சாப் அணி மும்பை அணியை போலவும் விளையாடியது.
– சே.கஸ்தூரிபாய்