ஐபிஎல் டி20 லீக் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதினர். இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது மும்பை இண்டியன்ஸ் அணி.
சேப்பாக்கம்
முதலில் பேட்டிங் செய்தது மும்பை இண்டியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள் ரோஹித் ஷர்மா மற்றும் காக். ரோஹித் ஷர்மா எப்போதும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்சிடம் அதிரடியான ஆட்டத்தை ஆடுபவர், என்னென்றால் இதற்கு முன்பு நடந்த அனைத்து ஐபிஎல் போட்டியிலும் கொல்கத்தா அணிக்கு எதிராக மட்டும் 939 ரன்களை அடித்திருக்கிறார் ரோஹித் ஷர்மா. அதே போல் ஒரு ஆட்டத்தை தான் நேற்றும் ரசிகர்கள் எதிர்பார்த்தனர், ஆனால் ஏமாற்றமே மிச்சம். நேற்றைக்கு ரோஹித் ஷர்மாவின் ஆட்டம் சுமாராகவே இருந்தது. 32 பந்துகளில் 43 ரன்களை எடுத்து பேட் கம்மின்ஸ் பந்தில் அவுட்டாகினார் ரோஹித் ஷர்மா.
அதற்கு பிறகு வந்த சூர்யகுமார் யாதவ்தான் மும்பை அணிக்கு ரன்களை குவித்தார். ஹர்பஜன் சிங் ஓவரில் மூன்று பவுண்டரிகளும், கிருஷ்ணாவின் ஒரே ஓவரில் இரண்டு பவுண்டரிகளும், 1 சிக்ஸரும் என்று அடித்து ஆடி 36 பந்துகளுக்கு 56 ரன்கள் எடுத்து, ஹசனின் பந்துவீச்சில் சிக்ஸருக்கு முயற்சி செய்து கேட்ச் ஆகி வெளியேறினார்.
அதற்கு பிறகு வந்த கிஷன், ஹிர்திக் பாண்டியா, பொல்லார்ட், க்ருணால் பாண்டியா, சஹர், பும்ரா அனைவருமே டெத் ரன்களில் நன்றாக அடித்து ஆடக்கூடிய ஆட்டக்காரர்கள். ஆனால் நேற்று மிக மோசமாக ஆடி வெளியேறினர். இறுதி ஓவரில் பந்து வீசிய ரஸல் மட்டுமே, பொல்லார்ட், க்ருணால் பாண்டியா, ஜென்சன், சஹர், மற்றும் பும்ரா வின் 5 விக்கெட்களை எடுத்தார். இறுதியில் 20 ஓவர்களில் 152 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது மும்பை இண்டியன்ஸ் அணி.
153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. சுலபமான இலக்கு என்று எண்ணிதான் கொல்கத்தா அணி ஆட்டத்தைத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரராக வந்த ராணா, முதல் ஓவரிலேயே பவுண்டரிகளை தட்டி அசத்தலான ஆட்டத்தை கொடுத்தார். இவரின் ஆட்டத்தால் கொல்கத்தா அணி ரன்ரேட்டில் நல்ல முன்னேற்றம் அடைந்தது. ஆனால் ராகுல் சஹாரின் பந்து வீச்சில் கொல்கத்தா அணியின் நிலையே மாறிவிட்டது.
ஆட்டத்தின் 9ஆவது ஓவரில் தனது முதல் ஓவரை தொடங்கிய ராகுல் சஹார், ஆட்டத்தை மும்பை பக்கமாக எடுத்துக் கொண்டார். ஹூப்மன் கில், திரிபாதி, இயான் மோர்கன், இறுதியாக அரை சதம் கடந்து ஆடிய ராணா என அனைவரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆட்டத்தின் போக்கையே மாற்றி, வெற்றியின் பாதையை மாற்றினார். 27 ரன்களுக்கு 4 விக்கெட்டை எடுத்த ராகுல் சஹார் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.
ஆட்டத்தின் சுவாரசியமே கடைசி 4 ஓவரில் தான். 24 பந்துகளுக்கு 32 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்தது கொல்கத்தா. 17 வது ஓவரில் பும்ராவின் பந்துவீச்சில் 8 ரன்களை எடுத்தது கொல்கத்தா. 18வது ஓவரில் க்ருணால் பாண்டியாவின் பந்துவீச்சில் 3 ரன்களை எடுத்தது. 19 வது ஓவரில் பும்ராவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது கொல்கத்தா. டீகே வும் ரஸலும் 4 சிங்கிள்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை கொல்கத்தாவுக்கு வந்தது.
போல்ட் தான் கடைசி ஓவரை வீசினார். கடைசி ஓவரின் மூன்றாவது பந்தில் போல்ட் டிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார் ரஸல். இந்த விக்கெட்டிலேயே மும்பை அணிக்கு வெற்றி கிடைத்து விட்டது. அடுத்த பந்தில் பேட் கம்மின்ஸ்ஸின் விக்கெட் க்ளீன் போல்ட் ஆகி மும்பை இண்டியன்ஸ் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் டி20 லீக் போட்டியில் தன் வெற்றிக் கணக்கைத் தொடங்கியது மும்பை இண்டியன்ஸ் அணி.
- சே.கஸ்தூரிபாய்