மா. இராசமாணிக்கம் என்னும் மாபெரும் தமிழ் ஆளுமை! – அழிக்கப்பட்ட தமிழ் ஆய்வாளர் குறித்த ஆவணப் பதிவு.

SHARE

மா. இராசமாணிக்கம் அல்லது இராசமாணிக்கனார் (மார்ச் 12, 1907 – 26 மே, 1967) என்னும் மாபெருந் தமிழ் ஆளுமையைத் தமிழுலகு தெளிவுறப் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.

“பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவும் ஒன்று” என்று பட்டியலிடுகின்ற வகையில் அவரைக் குறிப்பிடுவோர் அறிவிருந்தும் அவர் பெருமை அறியாதாரே.

பத்து வயதிலேயே தந்தையாரை இழந்து துன்புற்றாலும், “தந்தையொடு கல்வி போம்” என்னும் முதுமொழியைப் பொய்ப்பிக்கும் வண்ணம் தமது அண்ணன் இராமகிருட்டிணரால் கல்வி பயிற்றுவிக்கப்பட்டார். கர்நூல், சித்தூர், திண்டுக்கல், நன்னிலம், தஞ்சாவூர் என ஊர்கள் பலவற்றிற்கு அவர் அலைக்கழிக்கப்பட்டாலும் கல்வி பயில்வதில் தணியா வேட்கையுடன் அறிவின் விரிவும் உள்ளத்தின் கனிவுமே குறிக்கோளாய்க் கொண்டு கற்றார். அவர் கற்ற கல்வி இனத்திற்கு எழுச்சியூட்டி மொழிக்கு மறுமலர்ச்சி நல்கும் திறத்தை அவர்க்கு அளித்தது.

மௌனசாமி மடத்தின் இளந்துறவி கற்பித்த சித்தர் பாடல்கள் அவருள்ளத்தில் பகுத்தறிவையும் சுயமரியாதையையும் இளம்வயதிலேயே பதியச் செய்தன. கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளையின் வழிகாட்டுதல் சங்கச் சான்றோர் செய்யுளையெல்லாம் ஊன்றிக் கற்க உறுதுணையாயின. தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை அவர்களின் அன்பும் பரிவும் இளம்வயதிலேயே தமிழ்ச்சான்றோர் நட்பையும் நல்லுறவையும் பெறத் துணை நல்கின.

சென்னை வந்து, வண்ணாரப் பேட்டையிலுள்ள தியாகராயர் நடுநிலைப்பள்ளியில் தமது இருபத்தொரு வயதில் தமிழாசிரியராகப் பொறுப்பேற்றார். அங்கு கண்ணம்மாள் என்பவரைத் தன் 23ஆவது வயதில் மணந்தார். 1928 – 1936 வரையில் தியாகராயர் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர் மாணவர்க்கான பாடநூல்களையும் துணைப்பாட நூல்களையும் எழுதினார். அப்போது இவரின் கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு மட்டுமே என்பது குறிபிடத்தக்கது.1935-ஆம் ஆண்டில் இவர் வித்துவான் பட்டம் பெறும் முன்பே இவர் படைத்த நூல்கள் பல வித்துவான்களை உருவாக்கத் துணை புரிந்தன. தியாகராயர் நடுநிலைப்பள்ளி, முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளி, சென்னை விவேகானந்தர் கல்லூரி, மதுரைத் தியாகராசர் கல்லூரி, சென்னைப் பல்கலைக்கழகம் என இவரது பணியிடங்கள் மாறினாலும் உயர்நிலைப் பள்ளித் தமிழாசான், கல்லூரி விரிவுரையாளர், தமிழ்த்துறைத்தலைவர், பல்கலைக்கழகப் பேராசிரியர் எனப் பதவிகள் மாறினாலும் இவரது தமிழ்த்தொண்டு எவ்வித மாற்றமுமின்றி ஊக்கமும் ஊற்றமும் கொண்டு தமிழினத்தை ஏற்றமும் எழுச்சியும் பெறத் தூண்டுகோலாய் விளங்கியது.

‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்’ எனச் சான்றோரிடம் இவர் கற்ற கல்வியைக் கொண்டு கற்போர் உள்ளத்தில் ஐயமும் திரிபும் அகற்றும்வண்ணம் நூல் பல படைத்தார். சமுதாயத்தில் நிலவும் கசடு அற்றுப் போகும் வண்ணம் புதிய ஒளி பாய்ச்சித் தன்மதிப்பு கொண்டு சமுதாயம் தலைநிமிரும் வகையில் தொண்டாற்றினார்.

மா.ரா. என்னும் ஈரெழுத்தே இவரைக் குறிக்க அன்றைய தமிழ்நாட்டில் புகழுடன் பொலிந்தது. இந்தப் பெயரைக் கேட்டால் தமிழ்நெஞ்சங்களில் இவரது “தமிழர் திருமணத்தில் தாலி” என்னும் நூலே கிளர்ச்சியூட்டும் எண்ணத்தை ஊற்றெடுக்கச் செய்யும்.

தமிழர் திருமணத்தில் தாலி கட்டுதல் கி.பி. பதினோராம் நூற்றாண்டில் ஏற்பட்ட புதிய பழக்கமே என்பதனையும் பண்டைத் தமிழகத்தில் இப் பழக்கம் இல்லை என்பதனையும் விரிவான பல சான்றுகளுடன் இவர் விளக்கியபோது தமிழ்நாடே அதிர்ந்தது. பழமைப்பித்தர்கள் இவரது கருத்தை எதிர்த்துரைக்க முயன்று சான்றுகள் இன்றி இடர்ப்பட்டனர். சங்க இலக்கியத்திலிருந்து நாச்சியார் திருமொழி வரை அடுக்கடுக்காகச் சான்றுகளை இவர் தொகுத்துரைத்துத் தமது நிலைப்பாட்டின் மெய்ம்மையை நாட்டினார். 

அதுவரை கல்வி என்பது கற்று, புரிந்துகொண்டு விளக்கத்துடன் மீண்டும் கற்பித்தல் என்னும் பொம்மலாட்டக் கூத்தாக இருந்தது. ஆனால் கட்டுடைக்கும் கலையின் முன்னோடியாகத் திகழ்ந்த மா.ரா. கல்வியைத் தகர்ப்புமைய நோக்குக் கொண்ட அறிவியக்கமாக மாற்றினார். காலங்காலமாகப் படிந்துகிடக்கும் பழமைப் பாசியை நீக்கி, கற்போர் உள்ளங்களில் அகற்றமுடியாமல் கப்பிக்கொண்டிருக்கும் அழுக்கைப் போக்கிப் பகுத்தறிவுச் சூரியனின் உதயத்தால் புதிய விடியலைப் புலரவைக்கும் பெரியாரின் நெறியில் உழைக்கும் பொருத்தமான கல்வியாளராக மா.ரா. தமிழ்கூறு நல்லுலகெங்கும் புகழுடன் உலா வந்தார்.

தந்தை பெரியாரின் தன்மான இயக்கம் பரந்துபட்ட அளவில் பார்ப்பன மறுப்பு, சாதி மறுப்பு, சடங்கு மறுப்பு என்பவற்றைப் பரப்புரை செய்து மூடத்தனத்தின் முடைநாற்றம் போக்கப் பாடுபட்டது. இதனைப் போலவே தாலி மறுப்புத் திருமணங்களையும் ஏற்படுத்திச் சமூகத்தில் மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. பெரியார் தாலி அணிவது தேவையற்றது என்பதை வலியுறுத்தி வந்தாலும் தாலி அணியும் திருமணங்களையும் தலைமை ஏற்று நடத்திவைத் துள்ளார். 

பெண் என்பவள் ஆணின் சொத்து என்ற பிற்போக்கு அடிமைக் கருத்தியலைத் தகர்த்தெறிவதே அவரது முதன்மை நோக்கமாக இருந்தது. அவரது பேச்சையே மேற்கோளாகக் காணலாம்:

“இப்போது இங்குப் பெண்ணுக்குத் தாலி கட்டப்பட்டது. இதற்கு என்னதான் தத்துவார்த்தம் சொல்லப்பட்டாலும் இந்தத் தாலி கட்டுவதானது. ‘இந்தப் பெண், இந்த மாப்பிள்ளையினுடைய சொத்து’ என்கிற அறிகுறிக்காகத்தான். இந்தத் தத்துவம் சுலபத்தில் மாறிவிடும் என்று நான் கருத முடியவில்லை. தாலி கட்டாத கலியாணம் நடந்த போதிலும் மணப்பெண் மணமகனுடைய சொத்து என்பது மாறிவிடும் என்று நான் நினைக்க முடியவில்லை” (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், தொகுதி 1-3 (சமுதாயம்), பக்கம் 249)

பெரியாரின் பரப்புரைக்கு வலுவான அடித்தளமாக மா.இராசமாணிக்கனாரின் ஆராய்ச்சி அமைந்துள்ளதல்லவா?

 அறிஞர் மா.ரா. தமது “தமிழ் இனம்” என்னும் நூலில் பண்டைத் தமிழகத்தில் தொழிலின் அடிப்படையிலும் வாழ்நிலத்தின் அடிப்படையிலும் அரசனால் பெற்ற சிறப்பின் அடிப்படையிலும் வந்த பெயர்கள் பின்னர் சாதிகள் தோன்றக் காரணமாகிவிட்டன என்னும் கருத்தை முன்மொழிகிறார்.

“இங்ஙனம் தொழில் பற்றியும், இடம் பற்றியும், இறப்புப் பற்றியும் தோன்றிய பெயர்கள் எவ்வாறோ பிறவி பற்றியவை ஆகிவிட்டன. சாதிகளை ஒழித்துச் சமுதாயத்தை ஒரு நிலைக்குக் கொண்டுவர முயன்ற பௌத்த சமயமும் சமணசமயமும் நாட்டில் வீழ்ச்சியுற்றன. வடக்கே ஆட்சியிலிருந்த “ஒரு குலத்துக்கொரு நீதி” கூறும் மனுதர்ம சாத்திரம் தென்னாட்டிலும் கால்கொண்டது.” – என்னும் மா.ரா. அவர்களின் விளக்கம் சாதி இடையில் வந்தது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

1948-ஆம் ஆண்டு இவர் வெளியிட்ட “தமிழ்நாட்டு வட எல்லை” என்னும் நூல் பண்டைத் தமிழ் இலக்கியங்களிலும் பிற்கால இலக்கியங்களிலும் வேங்கடம் தமிழ்நாட்டின் வடக்கு எல்லை என்பது தெளிவுற மொழியப்பட்டுள்லதைப் பல்வேறு சான்றுகளுடன் விளக்குகிறார். மொழிவழி மாநிலம் பிரிக்கப்படும் போது தமிழ்நாட்டின் வடக்கு எல்லையாக வேங்கடம் அமையவேண்டும் என்பதனை வலியுறுத்துவதே இந் நூலின் நோக்கம்.இந் நூலில் கூறப்பட்டுள்ள பல்வேறு சான்றுகளை அடிப்படியாகக் கொண்டு அன்றிருந்த சென்னை மாநில அரசு வேங்கடத்தை வட எல்லையாகப் பெற்றிருக்கலாம்;பெற்றிருக்கவேண்டும்.ஆனால் செய்யத் தவறிவிட்டது.

இவ்வாறு மா.ரா. அவர்களின் ஒவ்வொரு நூலும் தமிழ் இனத்தின் விடிவுக்காகவும் தமிழ்மொழியின் மறுமலர்ச்சிக்காகவும் தன்மான உணர்வு மேலோங்கித் தமிழ்ச் சமுதாயம் மேன்மை பெறுதற்காகவும் படைக்கப்பட்டது.

ஆராய்ச்சியித் துறையில் பல முன்னோடி நூல்களை இவர் படைத்துள்ளார்.

01. சோழர் வரலாறு

02. இலக்கிய அமுதம்

03. கால ஆராய்ச்சி

04. நாற்பெரும் புலவர்கள்

05. பல்லவப் பேரரசர்

06. பல்லவர் வரலாறு

07. பெரியபுராண ஆராய்ச்சி

08. புதிய தமிழகம்

09. சேக்கிழார் – ஆராய்ச்சி நூல்

10. சேக்கிழார்

11. சைவ சமய வளர்ச்சி

12. சைவ சமயம்

13. சிலப்பதிகாரக் காட்சிகள்

14. மொஹஞ்சதரோ அல்லது சிந்து சமவெளி நாகரிகம்

15. தமிழ் அமுதம்

16. தமிழ் இனம்

17. தமிழ்நாட்டு வட எல்லை

18. தமிழ்மொழி இலக்கிய வரலாறு

19. தமிழக ஆட்சி

20. தமிழகக் கலைகள்

என்று இவரது ஆராய்ச்சிநூல்களின் பட்டியல் விரிந்துகொண்டே செல்லும். ஒவ்வொரு நூலும் தனது தலைப்பில் இதுவரை கூறப்பட்டுள்ள கருத்துகளைத் தகர்த்துப் பல புதிய கருத்துகளைக் கூறுவனவாக அமைந்துள்ளமை இந் நூல்களைக் கற்றால் நன்கு புலப்படும். வாழ்நாளெல்லாம் ஆராய்ச்சியே இவரது குறிக்கோளாகத் திகழ்ந்தது.

“இவர் மறைந்த சில ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தரான நெ. து. சுந்தரவடிவேலு சென்னைப் பல்கலைக் கழகத்தில் எங்கோ ஓரிடத்தில் பூட்டி வைக்கப்பட்டிருந்த இவ்வுரைகளைத் தற்செயலாகக் கண்டு எடுத்து பல்கலைக் கழகம் வெளியிட ஏற்பாடு செய்தார்.” என்னும் செய்தி குறிப்பிடத்தக்கது.

எதிர் நீச்சலிட்டு தம்மை வளர்த்துக் கொண்டாற்போலவே தமிழ்ச் சமுதாயத்தையும் வளர்க்கப் பாடுபட்டவர் இராசமாணிக்கனார் என்றும் காக்கை பிடிக்கத் தெரியாத உண்மைத் தமிழராக இருந்த காரணத்தால் இணைப்பேராசியர்(ரீடர்) பதவியிலேயே இருந்தார் என்றும் நெ.து.சுந்தரவடிவேலு குறிப்பிட்டுள்ளார்.

தாம் பாடுபட்டு எழுதிய பத்துப்பாட்டு உரையை வெளியிட வேண்டித் தாம் பணியாற்றிய சென்னைப் பல்கலைக் கழகத்திடம் ஒப்படைத்ததற்குப் பதில் இராசமாணிக்கனாரே வெளியிட்டிருந்தால் அவர் வாழ்ந்த காலத்திலேயே அவருக்குப் பணமாவது கிடைத்திருக்கும் என்று அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

 சென்னைப் பல்கலைக் கழகம் இவர் எழுதிய பத்துப்பாட்டு உரை நூலை யாரும் காணாத வண்ணம் பூட்டி வைத்து விட்டது என்றும் பிறகு பதவியிலிருக்கும் போதே இராசமாணிக்கனார் மாரடைப்பால் இறந்தார் என்றும் குறிப்பிடுகின்றார். இதனைத் தமிழ்ச் சமுதாயத்திற்குக் களங்கமாகத் துணைவேந்தர் நெ.து. சுந்தரவடிவேலு கருதியுள்ளார். ஆனால் இதுதான் தமிழ்ச்சமுதாயத்தின் அடையாளம் எனக் கருதி ஆறுதல அடைவோம்.

ஆராய்ச்சி என்னும் பெயரில் உப்பரிகையில் ஏறி ஒதுங்கிப் போய்விடாமல் தனது ஆராய்ச்சி சமுதாயத்தை எழுச்சிபெறச் செய்வதாக விளங்கவேண்டும் என்னும் ஒரே நோக்கத்துடன் உழைத்த ஒப்பற்ற ஆய்வாளர் மா. இராசமாணிக்கனாருக்கு இணையாக வேறு மொழிகளில் யரையும் கூற இயலாது.

மக்களை நோக்கி மக்கள் பயனுற உழைத்த மாபெரும் தமிழ் ஆளுமை மா.இராசமாணிக்கரைப் பெருமித்த்துடன் நினைவு கூர்வோம்.

கட்டுரையாக்கம்: மறைமலை இலக்குவனார் 


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இறையன்பு ஐ.ஏ.எஸ். இத்தனை நூல்களை எழுதி இருக்கிறாரா ? வியக்க வைக்கும் பட்டியல்!.

முதல் தங்க நாணயத்தை வெளியிட்ட சோழ அரசர் மதுராந்தகனா? இராஜராஜனா? – சிறப்புக் கட்டுரை

இரா.மன்னர் மன்னன்

காஞ்ச அய்லய்யா எழுதிய ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ – நூல் அறிமுகம்!.

இரா.மன்னர் மன்னன்

தனித்தமிழர்நாடு: மண்மீட்புக்கான வரைப‌டங்கள், சான்றுகள் மற்றும் சிந்தனைகளின் தொகுப்பு – நூல் அறிமுகம்

இரா.மன்னர் மன்னன்

அம்பை எனும் அழகியல் கலகக் குரல்! – சாகித்ய அகாதமி விருது பெற்ற பெண்ணியப் படைப்பாளியின் அறிமுகம்.

இரா.மன்னர் மன்னன்

கீழடியில் கிடைத்த சிற்பம் – ஆணா? பெண்ணா?

Admin

கீழடியில் 13 எழுத்துகளை கொண்ட பானை ஓடு கண்டெடுப்பு.!!

Admin

சு.சேதுராமலிங்கம் எழுதிய பிரபாகரன் சட்டகம் – நூல் அறிமுகம்

சிற்ப இலக்கணம். பகுதி 4. தொழிற் கை முத்திரையின் வகைகள் (5 – 8)

வெளியானது தமிழின் முதல் கணிப்பான் செயலி!.

இரா.மன்னர் மன்னன்

உயிர் பெறும் தமிழ் நாகரிகம் : அகரம் அகழாய்வு தளத்தில் மேலும் ஒரு உறைகிணறு கண்டுபிடிப்பு

Admin

தமிழும் காதலும்..! – காதலர்தின சிறப்புக் கட்டுரை.

இரா.மன்னர் மன்னன்

Leave a Comment