டுவிட்டர் கணக்கை மீட்டுக் கொடுத்ததற்காக தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவிற்கு நடிகை குஷ்பு நன்றி தெரிவித்துள்ளார்.
கடந்த 20ம் தேதி டி.ஜி.பி சைலேந்திர பாபுவை சந்தித்து பாஜக நிர்வாகி குஷ்பு புகார் ஒன்றை கொடுத்தார். அதில் தனது டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ட்விட்டர் நிறுவனத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தவறாக யாரும் பயன்படுத்தி விடக்கூடாது எனவும், எனது டுவிட்டர் பக்கத்தை முடக்கியவர்கள் யார் என்று கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி” யும் புகாரில் குஷ்பு தெரிவித்துள்ளார். குஷ்பு அளித்த புகார் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபி சைலேந்திர பாபு மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்படி, இந்த விவகாரத்தை கையிலெடுத்த சைபர் கிரைம் போலீசார் குஷ்புவின் ட்விட்டர் கணக்கை முடக்கியது யார் என்ற விவரத்தை தருமாறும், அந்த கணக்கை மீண்டும் அவரிடமே வழங்குமாறும் ட்விட்டர் நிறுவனத்துக்கு கடிதம் எழுதினர்.
இதையடுத்து, குஷ்புவின் ட்விட்டர் கணக்கு மீண்டும் அவருக்கே வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தனது ட்விட்டர் கணக்கை பாதுகாப்புடன் மீட்டுக் கொடுத்த டிஜிபி சைலேந்திர பாபுவிற்கும் அவரது குழுவினருக்கும் நன்றி தெரிவித்து நடிகை குஷ்பு தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.