- அபிநயா அருள்குமார்
கிராமத்துக்காரி – இது 90களின் உலகம். பகுதி1: பிடிக்காத பழம்
”ஹே..! ஹே சுகந்தி மணி எத்தனல..?”
”3 மணி 04 நிமிசம்ல !.“ – சிங்கப்பூர் ஆத்தா வாங்கி வந்த, பிங்க் பொம்மை போட்ட டிஜிட்டல் கடிகாரத்தை பார்த்தபடி மணி சொன்னாள் சுகந்தி. சற்று நேரத்தில்.
”சுகந்தி இப்போ எவ்வளவுல?” என்றேன் கைகளில் முதல் நாள் இரவு மெனக்கட்டு போட்ட நெயில் பாலிஷ உதிர்த்தபடியே…
”ஏல! 3:07 தான்ல ஆவுது! எதுக்குல ஓயாம அதையே கேட்குற?”
”ஒன்னும்மில்லல…..சும்மாத்தான்” – என கலர் கலராக படம் போட்டிருக்கும் மூன்றாம் வகுப்பு ஆங்கிலப் புத்தகத்தை திறந்து, பார்த்துக்கொண்டே ஏங்கிக்கொண்டிருந்தேன் நான்!
அதே சமயம், நேற்று வயல்காட்டில் தான் கொள்ளிவாய் பிசாசை பார்த்ததாக கூட இருக்கும் சக தோழிகளிடம் சுவாரசியம் குறையாமல் கைகளை ஆட்டி கதை அளந்து கொண்டிருந்தாள் என்நெருங்கிய தோழி சுகந்தி!. நல்ல கதை ஆசிரியராகும் திறமை அந்த வயதில் அவளுக்கு அதிகமாகவே இருந்தது.
கைகளை உயர்த்தி உயர்த்தி பயங்களை பரிமாரிக்கொண்டிருந்தாள், உயர்த்திய கைகளில் கட்டப்பட்டிருந்த கடிகாரத்தின் எண்கள் நான்கு மணியை தொட சில நிமிடங்கள் மட்டுமே மீதமிருந்தன.
வேக வேகமாக அந்த நரம்பு(நைலான்) பையில் புத்தகங்களை அள்ளிப்போட்டு, வீட்டிற்கு விடைபெற தயாராக இருந்தேன். சுகந்தியும் கதை சொன்ன களைப்பில் பெருமூச்சு விட்டு,
“ஏல அபி… அந்திக்கு தெரு லைட்ல படிக்க வருவியால?” – எனக் கேட்டாள்.
”வருவேன்ல!” என்றேன் அவள் கடிகாரத்தை மீண்டும் பார்த்தப்படி
”ம்ம்ம்… பெல்லடிச்சதும் வீட்டுக்கு யாரு ஃபர்ஸ்ட்டு போறதுனு போட்டி வப்போமா? செவிச்சா 2 சிலேட்டு குச்சி பெட்டு!” என்றாள் அவள்
”நான் வரலப்பா! நான் போறப்ப அம்மு அக்கா வீட்டு வழியா போறேன்.”
”ஏன்ல! வடக்க சுத்திப் போற!”
அவளிடம் அதை சொல்லவும் தோன்றவில்லை! சொல்லாமல் இருக்கவும் தோன்றவில்லை!
”ஏல சுகந்தி காலயில, அம்மு அக்கா வீட்டுல எங்க பெரியம்மா ஒரு டம்ளர் சீனி வாங்கிட்டு வர சொன்னுச்சு ! போனப்போ…”
டிங் டிங் டிங் டிங் ………………..
”ஹைய்யா! டாட்டால..!” நான்
”ஏய் என்னானு சொல்லுல!” அவள்
”சரி நீயும் வரியா எனோட , ஆனா பிரவீனு, பைரவி புள்ளைக்கெல்லாம் தெரிய கூடாது! நீ மட்டும் எங்கூட வா!” என்றேன்.
”எதுக்குல!?!”
புத்தக பையை வாரி இழுத்துக்கொண்டு,
“தா…ங்யூ டீச்சர்” ஒரு வழக்கமான ஆசிரியர் மரியாதை செலுத்திவிட்டு, பேசிக்கொண்டே வேக நடை போட்டோம் இருவரும்.
”சுகந்தியோ… அம்முக்கா வீட்டு மரத்துல, அவ்வளோ கொடுக்கப்பளில (கொடுக்காப்புளி), எல்லாம் செம பெருசு! பழுத்துருந்துச்சுல காலையில பாத்தேன்! போய் யாருக்கும் தெரியாம பரிச்சிருவோம்ல!”
”ஏல பூச்செல்வி! அம்முக்கா அம்மா பாத்தா அவ்ளோதான்ல…”
”கொல்ல கதவு சாத்தியிருந்தா போவோம்! இல்லனா வேணாம்ல” – என ஐடியாக்களை பகிர்ந்துக்கொண்ட , மூச்சிரைக்க திரும்பிப் பார்த்தபடி ஓடினோம்! கொல்லை கதவும் சாத்தியிருந்தது!.
உடனே கிந்து கிந்தாச்சி( ஒரு வகை களிப்பு நடனம்) போட்டபடி மரத்தை நோக்கி நகர்ந்தோம்! அங்கு ஏதோ பேச்சு குரல் கேட்பது போல இருந்தது..
உற்சாகத்தை கட்டுப்படுத்தி இருவரும் புத்தகப்பையை தலையில் மாட்டி எட்டிப்பார்த்தோம் , அங்கு ஒரு வகுப்பு பெரியவர்களான மாமன் மகன்கள் மாஸ்கோ அண்ணன், பன்னீர் அண்ணன்( மாமன் மகன்களை அண்ணன் என அழைப்பதுதான் எனது வழக்கம்) எல்லோரும் கொடுக்காப்புளி மரத்தின் கிளையை உலுப்பிக் கொண்டிருந்தனர்.
காலையிலிருந்து ஏங்கிக்கிடந்த எனக்கு, இது எதிர்பாராத அதிர்ச்சிதான் என்றாலும்..
வெகு நேரமாக அதே இடத்தில் நானும் சுகந்தியும் நின்று கொண்டு ஒரு கொடுக்காப்பளியாவது எங்கள் நாவில் சுரக்கும் எச்சிலுக்கு… குறிப்பாக எனக்கு, இரையாகாதா என வெறித்துக்கொண்டிருந்தோம்! அவர்கள் கண்டுகொள்ளும்படியாகத் தெரியவில்லை.
”அண்ணே எங்களுக்கு ஒன்னுண்ணே!” என வெட்கத்தை விட்டு கேட்டே விட்டேன், சுகந்தியும் என்னோடு சேர்ந்து கோரஸ் பாடினாள்.
இறுதியில் பருவமே அடையாமல், உலுக்கும் பொழுது உப்பு சப்பாணியாக விழும் ஒரு கொடுக்காப்புளியை பாவம் பார்த்து எங்களுக்குத் தந்தார்கள்.
கற்றுக்குட்டியின் கண்களில் தூசி பட்டால் எப்படி சிவந்து இருக்குமோ அந்த அளவு பெரிய பழத்தை காலையில் பார்த்து… அதைப் புசித்துவிடலாம் என வைத்திருந்த எண்ணம் பொய்த்து வீணாகிவிட்டது.
”ஏலே! இந்தாங்கடா… எம்முட்டு புள்ள ஒரு காய் திங்கல அவ்வளவையும் பரிச்சுட்டியலடா பாவியலா…” என கதவை திறந்து விளக்கமாற்றை (துடைப்பம்) எடுத்தபடி அம்முக்கா அம்மா துரத்த, அன்று எடுத்த ஓட்டம்! இன்றளவும் கொடுக்கப்புளி விருப்பமில்லா பண்டங்களில் ஒன்றாகக் காரணமாகிவிட்டது!