கேரளாவில் வரதட்சணை கொடுமை காரணமாக மீண்டும் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்திருப்பது அம்மாநில மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக கேரளாவில் வரதட்சணை கொடுமை காரணமாக இளம்பெண்கள் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு விஷ்மயா,அர்ச்சனா,சுசித்ரா என அடுத்தடுத்து மூன்று இளம்பெண்கள் இறந்தனர்.
இதனையடுத்து வரதட்சணை கொடுமை தொடர்பாக புகார் எழுந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள அரசு எச்சரித்திருந்தது. அப்படி இருந்தும் அங்கு மீண்டும் தற்கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சுனிஷாவுக்கும் கன்னூர் மாவட்டம் பையனூரை பூர்வீகமாக கொண்ட விஜீஷ் என்ற நபருக்கும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
அன்றிலிருந்தே சுனிஷாவுக்கு புகுந்த வீட்டில் பல்வேறு கொடுமைகள் நிகழத் தொடங்கியுள்ளது. அடிக்கடி பிறந்த வீட்டுக்கு போன் செய்து சுனிஷா நடக்கும் கொடுமையை எல்லாம் கூறி அழுவாராம். பெற்றோரும் சுனிஷாவுக்கு ஆறுதல் சொல்லி வந்துள்ளனர்.இதனைக் கண்டு ஆத்திரமடைந்த கணவர் குடும்பத்தினர் அவரது செல்போனையும் உடைத்துள்ளனர்.
கடந்த ஒரு மாதமாக சாப்பிட உணவுக் கூட கணவர் குடும்பத்தினர் கொடுக்காத நிலையில் கடைகளில் பார்சல் வாங்கி சாப்பிட்டுள்ளார். அவரது பெற்றோர் அவரை அழைத்து வர பலமுறை அவரது வீட்டிற்கு சென்றபோது கணவர் அனுப்ப மறுத்துள்ளார். மேலும் போலீசில் பலமுறை புகார் கொடுத்தும் அரசியல் செல்வாக்கால் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் சுனிஷா மரணத்திற்கு முதல்நாள் இரவு தனது சகோதரன் செல்போனுக்கு அவர் ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் “உன்னால் முடிந்தால் தயவுசெய்து இப்போதே வந்து என்னை அழைத்துச் செல். நான் உங்களுடன் வரத் தயாராக இருக்கிறேன்.
அவரும் அவரது தாயாரும் என்னை அடித்து நொறுக்கிவிட்டனர். இன்று இரவு நான் உயிரோடு இருப்பேனா என்று தெரியவில்லை” என தெரிவித்து விட்டு நடந்த கொடுமையெல்லாம் கூறியுள்ளார்.
இதனால் பதறிப்போன குடும்பத்தினர் விரைந்து வந்து பார்ப்பதற்குள் பாத்ரூமில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக சுனிஷா கண்டெடுக்கப்பட்டார். இந்த ஆடியோ கேரள தொலைக்காட்சிகளில் வெளியாகி பொதுமக்களை அதிர வைத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள கண்ணூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.