தனக்கு தமிழகமே தாய்வீடு என ஓய்வு பெற்ற டிஜிபி திரிபாதி உருக்கமாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 29வது டிஜிபியாக பதவி வகித்து வந்த ஜே.கே.திரிபாதி நேற்று ஓய்வு பெற்றார்.
அவருக்கு துறை சார்பில் சிறப்பான முறையில் பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதனையடுத்து 30வது டி.ஜி.பியாக பொறுப்பேற்றுள்ள சைலேந்திரபாபுவை பதவியில் அமர்த்தி காவல் துறையிலிருந்து ஜே.கே திரிபாதி பிரியா விடை பெற்றார்.
மேலும் வடம் கட்டப்பட்ட காரில் அவரையும் அவரது மனைவியையும் அமர்த்தி காவல்துறை உயர் அதிகாரிகள் அதனை இழுத்துச் சென்று வாயில் வரை கொண்டு சென்று நன்றி தெரிவித்தனர்
.சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் அவருக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய ஜே.கே திரிபாதி, காவல்துறை பணியை 36 ஆண்டுகாலம் சிறப்பாக ஆற்றி இன்று ஓய்வு பெறுகிறேன் என்றும், எனக்கு காவல் பணியில் இந்த பெருமையை வழங்கிய தமிழக அரசுக்கும், உடன் பணியாற்றிய அனைத்து காவல் துறை அதிகாரிகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறினார்.
மேலும் ஒடிசா மாநிலத்தில் பிறந்த எனக்கு வாழ்வளித்த தமிழகத்தையே எனது சொந்த மண்ணாக நினைக்கிறேன்.
பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும் தமிழக மக்களுக்கு எனது சேவையை தொடர்ந்து ஆற்றுவேன் என்றும் திரிபாதி தெரிவித்தார்.