தமிழகத்தில் இதுவரை 6,412 பேர் மட்டுமே நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள், கால்நடை மருத்துவ படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீ ‘நீட்’ என்னும் நுழைவு தேர்வை மத்திய அரசு ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
அந்த வகையில் 2021-2022 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்காக நீட் தேர்வு செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை ஜூலை 13 ஆம் தேதி தொடங்கியது.
இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை கடும் சரிவடைந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதுவரையில் 6,412 பேர் மட்டுமே நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளதாகவும், அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 505 பேரும், குறைந்தபட்சமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 9 பேரும் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து ஒரு அரசுப்பள்ளி மாணவர் கூட விண்ணப்பிக்கவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
நீட் தேர்வு எழுதி வெற்றிபெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு உள்ள நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.