போப்பாண்டவர் போப் பிரான்சிஸ் வெளியிட்ட உத்தரவுக்கு மாறாக ஜெர்மனி நாட்டின் கத்தோலிக பாதிரியார்கள் தற்பாலின ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். இதனால் கத்தோலிக சமயத்திற்குள் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது.
”தற்பாலின ஜோடிகளின் திருமணம் இயற்கைக்கு முரணானது என்பதாலும் உலகின் படைப்புக்கு எதிரானது என்பதாலும் தற்பாலின ஜோடிகளுக்கு கத்தோலிக பாதிரியார்கள் திருமணம் செய்து வைக்கக் கூடாது” – என போப் பிரான்சிஸ் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டார். இந்த உத்தரவு ஐரோப்பிய நாடுகளில் கத்தோலிக சமயத்துக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது.
ஏனென்றால் ஏற்கனவே பத்துக்கும் அதிகமான ஐரோப்பிய நாடுகளில் தற்பாலின திருமணங்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரங்கள் கொடுக்கப்பட்டுவிட்டன. கடந்த 2013ஆம் ஆண்டில் போப்பாண்டவராகப் பதவியேற்ற போப் பிரான்சிஸ் அப்போது தற்பாலின ஈர்ப்புள்ள மக்களுக்கு எதிராக எந்தக் கருத்தையும் கூறவில்லை. ‘ஒருவர் தற்பாலின ஈர்ப்பு உள்ளவராக இருந்தாலும் அவருக்கு இறை நம்பிக்கை இருக்கலாம், அவரை மதிப்பிட நான் யார்?’ – என்று அவர் அப்போது சொன்ன வாசகங்கள் இன்றும் ஐரோப்பாவில் மிகவும் பிரபலம்.
இந்நிலையில் சமீபத்தில் போப் பிரான்சிஸ் தனது நிலைப்பாட்டை மாற்றியது கத்தோலிகர்களுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. கத்தோலிகர்களில் ஒரு பகுதியினர் இதனால் கத்தோலிய சமயத்தில் இருந்து இளைஞர்கள் வெளியேற வாய்ப்பு உண்டு என்று அச்சமும் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த கத்தோலிக பாதிரியார்கள் தற்பாலின ஜோடிகளுக்கு தேவாலயங்களில் திருமணம் செய்து வைப்பதாக சர்வதேச செய்தி நிறுவனமான ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது. இந்த திருமணங்கள் ஜெர்மனியில் பெரும் எண்ணிக்கையில் நடைபெற்று வருகின்றன.
இந்த செயலால் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பாதிரியார்கள் வாடிகனின் உத்தரவை வெளிப்படையாக மீறி உள்ளனர். இதனால் வாடிகன் தனது நிலைப்பாட்டை மறு பரிசீலனை செய்யுமா? அல்லது கத்தோலிகர்களுக்குள் பிளவு ஏற்படுமா? – என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
– நமது நிருபர்