வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்திய போராட்டம் தொடங்கி இன்றோடு ஆறு மாதங்கள் ஆகின்றன. அதனால் இதை விவசாயிகள் கறுப்புதினமான அனுசரிக்கின்றனர்.
டெல்லி.
மத்திய அரசு புதிதாக திருத்தம் செய்து வெளியிட்ட 3 வேளாண் சட்டங்களுக்கு பஞ்சாப், அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்த விவசாய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அவை கடந்த நவம்பர் 26ம் தேதி டெல்லி எல்லையை முற்றுகையிட்டு போராட்டத்தை தொடங்கின. மத்திய அரசு விவசாயிகளுடன் பல கட்ட பேச்சு வார்த்தை நடத்திய போதும், சுமுக முடிவு எட்டப்படாத நிலையில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தப் போராட்டம் தொடங்கி இன்றோடு 6 மாதங்கள் நிறைவடைவதையொட்டி, இன்றைய தினத்தைக் கறுப்பு தினமாக அனுசரித்து நாடு முழுவதும் எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்க 40 விவசாய சங்கங்களை உள்ளடங்கிய சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
விவசாயிகளின் இந்த போராட்ட அழைப்புக்கு காங்கிரஸ், திமுக, சிவசேனா உள்பட 12 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
கொரோனா விதிகளைக் கருத்தில் கொண்டு பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் இன்று தங்கள் வீடுகளில் இருந்தபடியே கருப்புக் கொடியேற்றி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த போராட்டத்தின் காரணமாக டெல்லி எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
– பிரியா வேலு