நமது நிருபர்
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தின் வெளியீட்டுத்தேதி தள்ளிப் போவதாக, பட வெளியீட்டு நிறுவனம் அறிவித்தது.
கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சனின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் டாக்டர். பிரியங்கா இந்தத் திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். படத்தில் யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்து உள்ளனர்.
அனிருத்தின் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று உள்ள நிலையில், படத்தின் வெளியீடு மார்ச் 26ஆம் தேதியன்று இருக்கும் என்று படத்தைத் தயாரித்து இருந்த கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் மற்றும் எஸ்.கே.புரொடக்ஷன் நிறுவனங்கள் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் தமிழக பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் டாக்டர் திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப் போயுள்ளது. இந்த செய்தியை, டாக்டர் படத்தை வெளியிடும் கே.ஜே.ஆர் நிறுவனம் தனது அறிக்கை மூலம் உறுதிப்படுத்தி உள்ளது.
மேலும் அந்த அறிக்கையில்
“மார்ச் 26-ம் தேதி டாக்டர் படத்தை வெளியிட உற்சாகத்தோடு இருந்தோம். ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்கிறோம். படம் தொடர்புடைய அனைத்து தரப்பினரின் நலனையும், குறிப்பாக ரசிகர்களையும் மனதில் வைத்து இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்.
புதிய தேதியை இன்னும் சில நாட்களில் அறிவிப்போம். ‘டாக்டர்’ படம் ஆரம்பித்த நாளிலிருந்தே கொடுத்து வந்த ஆதரவை, ஊக்கத்தை அப்படியே வைத்திருங்கள். இந்தக் காத்திருப்புக்கு தகுதியுள்ள படமாக ‘டாக்டர்’ இருக்கும்” – என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
#டாக்டர் #சினிமா #சிவகார்த்திகேயன் #அனிருத்