பொற்பனைக்கோட்டையில் நடைபெற்றுவரும் அகழாய்வுப் பணியில் பழமையான செங்கல் கால்வாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேப்பங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பொற்பனைக்கோட்டையில், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் சார்பாக கடந்த ஜூலை 30ம் தேதி முதல் அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு தொல்லியல்துறை பேராசிரியர் இள.இனியன் தலைமை ஏற்றுள்ளார்.
இந்த அகழ்வாய்வில் இது வரை கருப்பு சிவப்பு பானை ஓடுகள், உடைந்த சுடுமண் பகுதிகள், இரும்பு பொருட்கள், பல வண்ண மணிகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கிடைத்துள்ளன
தற்போது இந்த அகழாய்வில் இன்று தென்மேற்கு திசையில் உள்ள ஒரு குழியில் சுமார் இரண்டரை அடி ஆழத்தில் செங்கல் கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்டது. இது நீரை வெளியேற்றுவதற்கான கால்வாயாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனத் தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதன் உள்ளளவு சுமார் அரை அடியைக் கொண்டுள்ளதாக இருக்கிறது. இந்தக் கால்வாய் சுமார் 2 அடி நீளத்துக்கு இருப்பதாகவும் அகழாய்வுக்குப் பிறகுதான் முழுமையாகக் கால்வாய் கட்டமைப்பு தெரியவரும் என தொல்லியல் துறை பேராசிரியர் இ.இனியன் கூறியுள்ளார்
சங்க காலத்தில் மக்கள் தண்ணீரை வெளியேற்றுவதற்கோ, வெளியில் இருந்து தண்ணீரை உள்ளே கொண்டு வருவதற்கோ இந்தக் கால்வாயைப் பயன்படுத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது
இந்தக் கண்டுபிடிப்பானது அனைத்துத் தொல்லியல் ஆய்வாளர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இவ்விடத்தைப் பார்வையிடுவதற்காக ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.