ஒலிம்பிக் போட்டியில் வில்வித்தை பிரிவில் இந்தியாவின் தீபிகா – பிரவீன் இணை காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று கோலாகலமாக தொடங்கிய ஒலிம்பிக் போட்டியில் இன்று மொத்தம் 11 தங்கப்பதக்கத்துக்கான போட்டிகள் நடைபெற உள்ளன.
இதில் வில்வித்தை போட்டியில் கலப்பு அணிகள் பிரிவு வெளியேற்றுதல் சுற்றில், இந்திய கலப்பு அணியான தீபிகா குமாரி- பிரவீன் ஜாதவ் ஜோடி சீன தைபேயின் சியா-என் லின்/சீ-சுன் டாங் ஜோடியை எதிர்கொண்டது.
இதன் முதல் செட்டில் இந்திய அணி 35 புள்ளிகளும், சீன தைபே 36 புள்ளிகளும் பெற்றன.இதனால் சீன தைபே அணி 2 புள்ளிகள் பெற்றது.
2-வது செட்டில் இரு அணிகளும் 1-1 என சமநிலை பெற்றது. இதனால் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் பின்தங்கியது.
3வது செட்டை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்திய ஜோடி விளையாடியது. இதில் இந்தியா 40 புள்ளிகள் பெற்று வெற்றி பெற 2 புள்ளிகள் கிடைத்தன.
இதனால் ஆட்டம் சமனில் இருந்தது.இதையடுத்து நடந்த 4வது செட் ஆட்டத்தில் சீன தைபே 34 புள்ளிகளும், இந்தியா 37 புள்ளிகளும் எடுக்க மீண்டும் இந்திய அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தன.
இதனால் தீபிகா குமாரி- பிரவீன் ஜாதவ் ஜோடி 5-3 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.