சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி… ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப் புள்ளி!.

SHARE

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. 

வான்கடே, மும்பை

டாஸ் வென்ற தோனி, பேட்டிங் செய்வதாகஅறிவித்தார். தோனியும், கோலியும் இந்த ஆட்டத்துக்கு மாற்றங்களோடுதான் வந்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், மொயின் அலி, எங்கிடிக்கு பதிலாக ப்ராவோ மற்றும் தாஹிர் களம் இறங்குவதாகவும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில், ரிச்சர்ட்சன், ஷாபஸ்க்கு பதிலாக கிறிஸ்டியன் மற்றும் சைனி களம் இறங்குவதாகவும் கூறினர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் சிறப்பான ஆரம்பத்துடன் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக வந்த ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டூப்ளஸி நன்றாகவே அடித்தார்கள். முதல் ஓவரிலேயே சிராஜின் பந்தில், வைடு ஆஃப் கவர் ஏரியாவில் கேப் பார்த்து  ஒரு பவுண்டரி, சிராஜின் அடுத்த ஓவரிலும் லாங் ஆன் ஏரியாவில் 1 சிக்ஸர், அவரது ஓவரிலேயே ருதுராஜும் மிட் ஆஃபில் 1 பவுண்டரி, ஜெமிசனோட பந்திலும் 2 பவுண்டரிகள் என்று பவர்பிளே ஓவர்களில் விக்கெட் எதுவும் இழக்காமல் 51 ரன்கள் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

இதுவே ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் முதல் தோல்வி என்று தான் கூற வேண்டும். இதுவரைக்கும் ஆடிய போட்டிகளில், ராயல் சேலஞ்சர்ஸ் அணி பவர்பிளே ஓவரில் விக்கெட்டே எடுக்காமல் போனது இந்த போட்டியில் மட்டும்தான்.  

ருதுராஜ் மற்றும் டுப்ளஸியின் கூட்டணி, 10ஆவது ஓவரில் சஹலின் பந்து வீச்சில் கேட்ச் ஆகி முடிவுக்கு வந்தது. ருதுராஜ் கெய்க்வாட் 25 பந்துகளில் 33 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

அடுத்து வந்த ரெய்னா ஆடிய முதல் பந்தே, லாங் ஆன் திசையில் சிக்ஸர் போனது. சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு நான் இருக்கேன் என்றது போல் இருந்தது அந்த சிக்ஸர். இந்த சிக்ஸர் தான் ஐபிஎல் தொடரில் அவர் தொடும் 200வது சிக்ஸர்.  அடுத்தடுத்த ஓவர்களிலும், கிறிஸ்டியனின் பந்தில் 1 பவுண்டரி, வாஷிங்டன் பந்தில் 1 சிக்ஸர் என்று ரன்களை குவித்தார்கள் ரெய்னாவும், டூப்ளஸியும். 

இந்த 2 விக்கெட்களை எடுத்தே ஆக வேண்டும் என்று வந்தார் ஹர்ஷல் பட்டேல். 14 வது ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் ரெய்னாவும் டூப்ளஸியும் கேட்ச்சில் அவுட்டாகி சென்றனர். ஒரே ஓவரில் 2 விக்கெட் போனது சென்னை அணிக்கு. 

14 ஓவரில் வந்த ஜடேஜா  மற்றும் ராயுடு, பவுண்டரி, சிக்ஸர் என ஒவ்வொரு ஓவரில் அடித்தாலும் ஸ்கோர்  என்னமோ ஏறவே இல்லை. 18ஆவது ஓவரில் ராயுடுவும் விக்கெட் ஆக 18ஆவது ஓவரில் வந்தார் தோனி. அதுவரை சென்னை அணியின் ஸ்கோர் 145 ரன்கள் தான். 19ஆவது ஓவரில் ஜடேஜா 1 பவுண்டரி, சிங்கிள்ஸ் என 154 ரன்கள் எடுத்தது சென்னை அணி. 

20ஆவது ஓவர்தான் ஆட்டமே. 154 ரன்கள்தான் இருக்கு, இந்த ஓவரில் 6 பாலும் 6 சிக்ஸரா இருந்தா எப்படி இருக்கும்? – என்று ரசிகர்கள் எண்ணியது ஜடேஜாவுக்கு கேட்டதோ என்னவொ 6 பந்துகளும் தெறித்துப் பறந்தன அதுவும் ஹர்ஷல் பட்டேலின் பந்து வீச்சில். ஜடேஜா முதல் ஸ்லாட் பந்தை அழகாக ஸ்வைப் செய்தார் பந்து சிக்ஸருக்கு பறந்தது.  இரண்டாவது பந்தும் அதே போல  சிக்ஸர் சென்றது. 3ஆவது பந்து லாங் ஆனில் சென்று சிக்ஸர் போனது. அதுவும் நோ பாலில். அந்த நோ பாலில் கிடைத்த ஃப்ரீ ஹிட்டிலும், பந்து ஸ்கொயர் லெக் பக்கம் பறந்து சிக்ஸர் போனது. 4 வது பந்து, வைடு யாக்கர் பந்து, அதற்கு இரண்டு ரன்கள் மட்டும் வந்தது. 5 வது ஃபுல் டாஸ் பந்தை அழகாக டீப் மிட் விக்கெட் பக்கம் தூக்கினார், அதுவும் சிக்ஸர் போனது. இன்னும் ஒரே ஒரு பந்து தான் அதுவும் சிக்ஸர் போயிடனும் என்று ரசிகர்கள் வேண்ட, கடவுள் கொஞ்சம் மனமிரங்கினார் போல, கடைசி பந்து, ஸ்கொயர் லெக் பக்கம் பவுண்டரிக்கு போனது. ஜடேஜா அரை அசத்துக்கு பேட்டை தூக்கியது நானும் ரவுடி தான் என்பது போல் இருந்தது. மொத்தம் 37 ரன்கள் இந்த 6 பந்துகளில் மட்டும்.  ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றி, எதிரணியை வாயைப் பிளக்க வைத்து விட்டார் ஜடேஜா. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்கோர் 191 ஆக உயர்ந்தது.   

பின் வந்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 192 ரன்களை இலக்காக வைத்து ஆடத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கோலியும், படிக்கல்லும் களம் இறங்கினர். முதல் ஓவரில் 2 பவுண்டரிகள், 2ஆவது ஓவரில் 2 சிக்ஸர்கள், 3ஆவது ஓவரில் 3 பவுண்டரிகள் என்று அடிக்க ஆரம்பித்தார் படிக்கல். 3 ஓவரில் 44 ரன்கள் வந்து விட்டன.  விக்கெட் எடுத்தே ஆகவேண்டும் என்று எண்ணி தோனி, இடது கை பந்து வீச்சாளரான சாம் கர்ரனை அனுப்பினார். திட்டம் சரியாகவே வேலை செய்தது, முதல் பந்திலேயே கோலியின் விக்கெட் போனது. அடுத்து படிக்கலின் விக்கெட்டை எடுக்க எண்ணிய தோனி, அவருக்காக ஸ்பின்னரை அனுப்பினார். 5ஆவது ஓவரில் தாக்கூரின் பந்தில், படிக்கல் தூக்கி அடிக்க முயற்சி செய்து, ஸ்கொயர் லெக் ஃபீல்டிங் ஏரியாவில் இருந்த ரெய்னாவின் கையில் சென்று கேட்ச் ஆனது. இப்படியாக அடுத்த முக்கியமான விக்கெட்டும் போனது. பவர்பிளேவில் இரண்டு முக்கிய விக்கெட்களும் வீழ்ந்தன.

அடுத்தடுத்த ஓவர்களையும் ஸ்பின்னருக்கே கொடுத்தார் தோனி. அதன் பலன், ஜடேஜாவின் பந்தில் வாஷிங்டன் மற்றும் மேக்ஸ்வெல்லின் விக்கெட்கள் வீழ்ந்தன. தாஹிர், இந்த ஐபிஎல்லில் இது அவரின் முதல் ஆட்டம், பழைய மாதிரியே அதே வேகம், அவரது ஓவரில் கிறிஸ்டியனை ஜடேஜாவோடு சேர்ந்து ரன் அவுட்டாகினார். அதற்கு அடுத்த ஓவரில், டிவில்லியர்ஸை போல்ட் ஆகி அனுப்பி வைத்தார் ஜடேஜா. அடுத்தடுத்த ஓவர்களிலும் விக்கெட்டாய் போனது. 12ஆவது ஓவரில், தாஹிரின் பந்தில் ஹர்ஷல் பட்டேல் போல்ட் ஆகி சென்றார். 14 ஓவரில் பறுபடியும் தாஹிரின் பந்தில் சைனி அவுட்டானார். 16ஆவது ஓவரில் ஃப்ராவோவின் பந்தில் ஜேமிசன் ரன் அவுட்டானார். 17ஆவது ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் இருந்தது ராயல் சேலஞ்சர்ஸ். இது போதுமே என்று இருந்தது சென்னை அணியின் ரசிகர்களுக்கு. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் அப்படித்தான் இருந்தது போல, அடுத்த மூன்று ஓவர்கள், ரொம்ப நாட்கள் கழித்து சந்திக்கும் நண்பர்கள் விளையாடும் ஆட்டம் போல் ஆனது. இறுதியில் 122 ரன்கள் எடுத்து தோற்றது ராயல் சேலஞ்சர்ஸ் அணி. இந்தத் தோல்வியால் இந்த ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெற்றுவந்த தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

– சே.கஸ்தூரிபாய்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மக்கள் பத்திரிக்கையாளர் டேனிஷ் உடல் ஜாமியா பல்கலை.யில் அடக்கம்

Admin

போட்டியின் போது மழை அதிகமானதால் டேக் ஆஃபில் சிரமப்பட்டேன்: மாரியப்பன் தங்கவேலு

Admin

தமிழ்நாட்டை காவிமயமாக்குவதுதான் திராவிட மாடலா? சீமான் காட்டம்

Admin

200 ரன்களைக் கடந்த 2 அணிகள்! கடைசி பந்தில் வென்ற பஞ்சாப் கிங்ஸ்! ஐ.பி.எல்.லில் அதிரடி!

கேரளாவின் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார் பினராயி விஜயன்

கொரோனா பாதித்த மாமனாரை முதுகில் தூக்கி வந்த மருமகள்!.

விமான நிலையத்தின் பெயர் மாற்றம்… அதானி பெயர் பலகை உடைப்பு

Admin

கொரோனா இரண்டாம் அலை தீவிரமானதா? – இந்திய மருத்துவ கவுன்சில் அறிக்கை

ஒரே சளி தொல்லை டாக்டர்… தனி ஆளாய் மருத்துவமனைக்கு சென்ற 3 வயது சிறுமி

Admin

முதல் குவாலிபையர் போட்டி… சி.எஸ்.கே.வில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் என்னென்ன?

இரா.மன்னர் மன்னன்

கொரோனா 2ஆம் அலையில் கர்ப்பிணிகளுக்கு அதிக பாதிப்பு – அதிர்ச்சி தகவல்

Admin

விவிபேட் வேண்டாம்… ஒரே கட்டமாக தேர்தல் நடத்துங்கள்: தமிழக அரசியல் தலைவர்கள் சொல்வது என்ன?

Pamban Mu Prasanth

Leave a Comment