பிப்ரவரி 14ம் தேதி மேற்கத்திய கலாச்சாரத்தின் பரவலுக்கு எதிராக பசு அணைப்பு தினமாக கொண்டாட அழைப்பு விடுத்திருந்தது மத்திய அரசின் விலங்குகள் நல ஆணையம்.
மத்திய கால்நடை மற்றும் மீன்வளத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் விலங்குகள் நலவாரியம் கடந்த 8ம் தேதி இந்த அறிக்கையை வெளியிட்டிருந்தது.
பிப்ரவரி 14-ந் தேதி உலக நாடுகளில் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர் தின கொண்டாட்டங்களுக்கு பொதுவாக வலதுசாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பது வழக்கம். சில இடங்களில் காதலர் தின கொண்டாட்டம் வன் முறையில் முடிந்ததும் உண்டு.
இந்நிலையில் மத்திய கால்நடைத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய விலங்குகள் நல வாரியம் திடீரென ஒரு அறிவுறுத்தலை விடுத்தது. அதாவது பிப்ரவரி 14-ந் தேதி, பசுக்களை கட்டிப்பிடிக்கக் கூடிய வகையில் பசு அணைப்பு தினமாக கடைபிடிக்க வேண்டும் என்பதுதான் அந்த அறிவிப்பு.


இந்த அறிவிப்பு வெளியான உடனே இணையத்தில் பேசு பொருளானது. விலங்குகள் நல வாரியத்தின் தலைவர் எஸ்.கே.தாத்தா தமது அறிக்கையில் கூறியிருந்ததாவது:
”மேற்கத்திய நாடுகளின் கலாசார தாக்கங்களால் நமது வேதகால பண்பாடு என்பது அழிந்து வருகிறது. நமது பாரத தேசத்தின் கலாசாரம், பண்பாடு ஆகியவை மேற்கத்திய கலாசார தாக்கத்தால் மறக்கப்பட்டு வருகின்றது.
பசுக்கள் நமது வாழ்வியலில் அதிக பலன்களைத் தருகின்றன. பசுக்களை நாம் அரவணைப்பதால், கட்டிப் பிடிப்பதால் மன ரீதியான வளம் அதிகரிக்கும். இது தனிநபர்களுக்கு மட்டும் அல்லாமல் சமூகத்திலும் கூட மகிழ்ச்சியை உருவாக்கும். இதனால்தான் பசுவை நேசிப்பவர்கள், மதிப்பவர்கள் வரும் பிப்ரவரி 14-ந் தேதியை பசுவை அணைக்கின்ற, கட்டிப்பிடிக்கின்ற தினமாக கொண்டாடுங்கள்” – இவ்வாறு எஸ்.கே.தத்தா கூறியிருந்தார்.


ஏற்கனவே இந்துத்துவவாதிகளின் மாடு, சாணம், கோமியம் பற்றிய கருத்துக்கள் கடும் விமர்சனத்தை பெற்றிருந்தன , அந்த வரிசையில் பசு அணைப்பு தினமும் இணைந்து கொண்டது. இந்த பசு அணைப்பு தினத்துக்கு கடும் கண்டனங்களும் எதிர்ப்பும் எழுந்தன. பசு அணைப்பு தினத்தை முன்வைத்து கிண்டலான மீம்ஸ்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன.
சிவசேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் எம்பி, பாஜகவினருக்கு அதானிதானே புனிதப் பசு. ஆகையால் பாஜகவினர் புனிதப் பசுவாகிய அதானியை அரவணைத்துள்ளனர் என கிண்டலடித்தார். இதேபோல பல்வேறு கட்சி தலைவர்களும் விமர்சனம் செய்திருந்தனர். இதனையடுத்து தற்போது இந்த அறிவுறுத்தலை இந்திய விலங்குகள் நல வாரியம் திரும்பப் பெற்றுள்ளது.