கோவாக்சின் தடுப்பூசிக்கான அவசரகால பயன்பாட்டு அனுமதியை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பான எஃப்.டி.ஏ. நிராகரித்துள்ளது.
கொரோனா தடுப்பு மருந்தாக இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கண்டுபிடிப்பை அடிப்படையாக கொண்டு சீரம் இந்தியா நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியும் பயன்பாட்டில் உள்ளது.
இதில் கோவாக்சின் தடுப்பூசியை தேசிய வைராலஜி நிறுவனம், ஐசிஎம்ஆருடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் இந்தியாவில் தயாரித்து வருகின்றன.
இந்த மருந்தானது 3ஆவது கட்ட பரிசோதனை முடிவுகளை தெரிவிக்காமலேயே பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது.
இதனிடையே பாரத் பயோடெக் நிறுவனத்தின் தொழில் கூட்டு நிறுவனமான ஒகுஜன் நிறுவனம் அமெரிக்காவில் இந்த தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்து இருந்தது.
ஆனால் இந்த கோரிக்கையை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஏற்க மறுத்துள்ளது.
மேலும் கூடுதலாக பரிசோதனைகள் நடத்திய முடிவுகளை தர வேண்டும் என்றும், அதன்பிறகே அனுமதி கேட்டு விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தடுப்பூசி சோதனையிலிருந்து ஒரு பகுதி டேட்டாவை மட்டுமே சமர்பித்ததால் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் தங்களுக்கு அனுமதி கிடைக்கும் என ஒகுஜன் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனமான டபிள்யூ.ஹெச்.ஓ.-வும் கோவாக்சின் மருந்திற்கு இதுவரை அங்கீகாரம் வழங்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
– மூவேந்தன்