கொரோனா பரவல் காரணமாக 9-11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசால் காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. பின்னர் கொரோனா பாதிப்புகள் குறைந்ததை அடுத்து இந்த ஆண்டு ஜனவரியில் 10,12ஆம் வகுப்புகளும், பிப்ரவரியில் 9-12 வரையிலான அனைத்து வகுப்புகளும் இயங்கத் தொடங்கின.
இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக இந்தியா முழுவதும் கொரோனா பரவல் வேகம் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் 12ஆம் வகுப்பு தவிர்த்த பிற வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? – என்று ஆசிரியர் சங்கங்களும் பெற்றோர் ஆசிரியர் அமைப்புகளும் கேட்டு வந்தன.
இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்க தமிழக தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி இன்று வெளியிடப்பட்ட அரசாணையில், மார்ச் 22 முதல் 9-11ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே இந்த மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து என பள்ளிக் கல்வித்துறை உறுதி செய்து உள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே மாணவர்களுக்கு நடக்கும்.
நமது நிருபர்.