நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கமும் உயிரிழப்புகளும் அதிகரித்துவரும் இச்சூழலில் தங்கள் உதவியை இந்தியா நிராகரித்துள்ளதாக ஐ.நா. கூறியுள்ளது.
கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடுமையான விளைவுகளை உருவாக்கி உள்ள நிலையில், வட மாநில மக்கள் உரிய சிகிச்சை கிடைக்காமல் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்து வருகின்றனர்.
இந்தியாவின் நிலையைக் கண்டு பல நாடுகள் உதவி செய்ய முன் வந்த நிலையில் ஐநா சபையும் தனது உதவி கரத்தை நீட்டி இருந்தது. ஆனால் இந்தியா அதை நிராகரித்து விட்டதாக தனது வருத்தத்தை ஐ.நா. வெளியிட்டு உள்ளது.
இந்தியாவுக்கு கொரோனா சிகிச்சைக் கருவிகளை வழங்க ஐ.நா. தயாராக இருந்ததாகவும். ஆனால் இந்திய அரசு தற்போது போதுமான மருத்துவக் கருவிகள் உள்ளதால் ஐ.நா.வின் உதவியை வேண்டாம் என்று கூறிவிட்டதாகவும் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்-சின் துணை செய்தி தொடா்பாளா் பர்ஹான் ஹக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், ஐ.நா. தனது உதவியை திரும்பப் பெற்றுக் கொள்ளவில்லை என்றும், தேவைப்படும்போது இந்தியா இந்த உதவியைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல உயிர்கள் மடியும் இச்சூழ்நிலையில் ஐநாவின் உதவியை இந்தியா நிராகரித்தது சரியா? – என பல தரப்பு மக்களும் இந்திய அரசின் செயலை விமர்சித்து வருகின்றனர்.
- பிரியா வேலு