உலகெங்கும் 15 கோடிக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிப்பை சந்தித்து உள்ளதாக சமீபத்திய புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
கடந்த 2 ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவின் இரண்டாம் அலை தற்போது உச்சத்தில் உள்ளது. உலகின் அனைத்து நாடுகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் 5 நாடுகளாக அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன.
நேற்றுவரை கிடைத்த புள்ளிவிவரங்களின்படி, உலகெங்கும் இதுவரை கொரோனா தொற்றால் 15 கோடியே 89 லட்சத்து 53 ஆயிரத்து 107 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 13 கோடியே 64 லட்சத்து 79 ஆயிரத்து 915 நபர்கள் குணமடைந்து உள்ளனர். கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33 லட்சத்து 6 ஆயிரத்து 229 ஆகும். ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 153 நபர்கள் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
கொரோனா இரண்டாம் அலையின் பரவல் முதல் அலையின் பரவலை விட அதிகமாக உள்ளது. சிறுவர்களும் குழந்தைகளும்கூட இதனால் பாதிக்கப்படுகின்றனர். எனவே கொரோனா மீது சிறிதும் அலட்சியம் காட்டாமல் மக்கள் தங்கள் பாதுகாப்பில் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். தேவையில்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்ப்போம். முகக் கவசம், கை தூய்மை ஆகியவற்றைப் பின்பற்றுவோம். கொரோனாவில் இருந்து விலகி நிற்போம்.
- நமது நிருபர்