சேலத்தில், மகளிருக்கான இலவச பயணச் சீட்டை, வடமாநில பயணிகளுக்கு கொடுத்து மோசடி செய்த பேருந்து நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்வதற்காக, கட்டணம் இல்லாமல், மகளிர் என அச்சிடப்பட்ட பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சேலம் ரயில்நிலையத்திலிருந்து, பழைய பேருந்து நிலையத்திற்குச் செல்லும் அரசு பேருந்தில், வடமாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பயணம் செய்துள்ளனர்.
பேருந்து ஐந்துரோடு பகுதியில் வந்தபோது, டிக்கெட் பரிசோதகர்கள் பேருந்தில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, வடமாநிலத்தைச் சேர்ந்த ஆண் தொழிலாளர்கள் 26 பேருக்கு, மகளிர் பெயர் அச்சிடப்பட்ட இலவச பயணச் சீட்டை கொடுத்து, நடத்துனர் நவீன்குமார், பணம் வசூலித்து மோசடி செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து, போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் நடத்துனரின் மோசடி உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நவீன்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.