தமிழ்நாட்டில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஒரு மாதத்தில் அறிக்கை சமர்பிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக்குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு நீட் தேர்வு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதா என்பது குறித்தும், அவ்வாறு பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால் அவற்றை சரி செய்யும் வழிமுறைகள் குறித்தும் ஆராய குழு அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்து அவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த குழுவின் உறுப்பினர்களாக மருத்துவர்கள் ரவீந்திரநாத், ஜவஹர் நேசன், மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் சட்டத்துறை செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சிறப்பு பணி அலுவலர், மருத்துவக் கல்வி இயக்குனர் மற்றும் மருத்துவக் கல்வி இயக்கக கூடுதல் இயக்குனரும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழு உரிய புள்ளி விவரங்களை ஆய்வு செய்து தமிழ்நாட்டிலுள்ள பின்தங்கிய மாணவர்களின் நலனைப் பாதுகாத்திடத் தேவையான பரிந்துரைகளை ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் இந்தப் பரிந்துரைகளை ஆய்வு செய்து தமிழக அரசு அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.