கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண் ஒருவர் வெள்ளிகிழமைகளில் கோவில்களை திறக்க வலியுறுத்தி சாணி பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கோவை பூ மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் விஜயா. இவர் அவிநாசி சாலையில் உள்ள தண்டுமாரியம்மன் கோவில் முன்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூ விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த விஜயா, அலுவலக வாளாகத்தில் அவர் கொண்டு வந்திருந்த சாணிப் பவுடரை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனயாக அவரை தடுத்தனர். அப்போது ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் தண்டுமாரியம்மன் கோவில், கோனியம்மன் கோவில்களை திறக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் போலீசாரின் கால்களில் விழுந்து கதறிய அவர், ஆடி மாத உற்சவம் நடைபெறும் வெள்ளிக்கிழமைகளில் கோவில்களை பூட்டினால் லட்சக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்படும் எனவும், ஆத்தாவுக்கே இந்த நிலையா என ஆதங்கப்பட்டு கூச்சலிட்டார்.
இதனையடுத்து விஜயாவை சமரசப்படுத்திய போலீசார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து வெளியேற்றி விசாரணைக்காக பந்தய சாலை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.