தமிழகத்திற்கு ஒரு கோடி டோஸ் தடுப்பூசிகளை வழங்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மாநில முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.சமீபத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்திற்கு ஒரு கோடி டோஸ் தடுப்பூசிகளை வழங்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த ஜூலை 8ம் தேதி வரை, தமிழ்நாட்டுக்கு 18 முதல் 44 வயதுடையவர்களுக்கு செலுத்துவதற்காக 29 லட்சத்து 18 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகளும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்துவதற்காக 1கோடியே 30 லட்சம் தடுப்பூசிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த தடுப்பூசி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என்றும், இந்த நிலையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும், அம்மாநிலத்தின் 18 முதல் 44 வயதுடையவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தடுப்பூசி ஒதுக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதையும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
இருந்த போதிலும் தமிழ்நாட்டில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்றவாறு இதுவரை தடுப்பூசிகள் ஒதுக்கப்படாததால் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டு, சிறப்பு ஒதுக்கீடாக தமிழத்திற்கு ஒரு கோடி தடுப்பூசிகளை வழங்க வேண்டுமென மு.க ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.