இசை நிகழ்ச்சி தோல்வியடைந்ததாக கூறி ஏ.ஆர்.ரஹ்மானிடம் ரூ.3 கோடி நஷ்ட ஈடு கேட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த 2000ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹமானை வைத்து துபாயில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த சென்னையை சேர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் காளியப்பன் என்பவர் ஏற்பாடு செய்திருந்தார்.
எதிர்பார்த்த அளவுக்கு அந்த நிகழ்ச்சி வெற்றி பெறவில்லை என்றும் இதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும், மூன்று கோடி ரூபாய் நஷ்ட ஈடாக ஏ.ஆர்.ரஹ்மான் தரவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
நிகழ்ச்சி நடத்தியதால் நஷ்டம் ஏற்பட்டதற்கு பொறுப்பாக முடியாதென்றும், நிகழ்ச்சிக்காக பேசிய தொகையைக்கூட மனுதாரர் தராமல், போலியாக இழப்பீடு கேட்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களுக்கு பின், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான நஷ்ட ஈடு வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.