தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணத்தை அடுத்த திருப்பனந் தாளில் நீலப்புலிகள் இயக்க நிறுவன தலைவர் உமர்பாரூக்கின் நினைவு நாள் பொதுக்கூட்டம் 2019 ஆம் ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி நடைபெற்றது. இதில், திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கலந்துகொண்டு ராஜராஜசோழன் வரலாறு தொடர்பாக சில கருத்துகளை பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில், திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் சார்பில் திருவிடைமருதூர் காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.
மனுவைப் பெற்றுக்கொண்ட திருப்பனந்தாள் போலீஸார், கலகம் உண்டாக்குதல் மற்றும் சாதிமத மோதல் உருவாக்குதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவுசெய்துள்ளனர்
. இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பா.ரஞ்சித் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் இந்தக் கருத்துகளை உள்நோக்கத்துடன் பேசவில்லை. என் கருத்து எந்தச் சமூகத்துக்கும் எதிராக அமையவில்லை. இருப்பினும் என் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவரது மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்த போது.ஒருவர் தனது கருத்தை வெளியிடும் சுதந்திரம் இருக்கிறது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி இளங்கோவன் கருத்து தெரிவித்து வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தடை விதித்து மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று கூறி விசாரணையை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்