கொரோனா தொற்றுப்பரவலால் மூடப்பட்டிருந்த பள்ளிகள் மீண்டும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மூன்றாம் அலைக்கான அச்சுறுத்தல் இருந்ததால் இந்த முடிவில் இழுபறி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழக அரசு உறுதியாக செடம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் சில வழிகாட்டு நெறிமுறைகளுடன் செயல்படும் என்று அறிவித்து விட்டது.
அதே சமயம், அங்கன்வாடி மையங்கள் குறித்த எந்த அறிவிப்பும் இல்லையே என்று சமூக வலைதளங்களில் அப்போதே சலசலப்பு எழுந்தது.
இந்நிலையில், செப்.1 முதல் அங்கன்வாடி மையங்களும் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
நெயில் பாலிஷ் போடுவது முதல் தடுப்பூசி போடுவது வரை கவனமாக நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில் வரும் 1ந் தேதி முதல் சூடான மதிய உணவு வழங்க வேண்டும்.
2 முதல் 6 வயது குழந்தைகளுக்கு பகல் 11.30 மணி முதல் 12.30 மணி வரை மதிய உணவு வழங்க வேண்டும்அங்கன்வாடி ஊழியர்கள் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
அங்கன்வாடி ஊழியர்கள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும்.
வளாகங்கள், சமையலறை உள்ளிட்டவற்றை தூய்மைப்படுத்திய பின் பயன்படுத்த வேண்டும்.
அங்கன்வாடி மையங்களுக்கு வரும் 2 முதல் 6 வயது குழந்தைகள் முககவசம் அணிவது கட்டாயமில்லை.
அங்கன்வாடி ஊழியர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தால் மையத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
பயனாளிகள் முட்டைகளை வீட்டிற்கு எடுத்துச்செல்ல அனுமதிக்கக்கூடாது
ஊழியர்கள் விரல் நகங்களில் நகப்பூச்சு மற்றும் செயற்கை நகங்களை பயன்படுத்தக்கூடாது.
மூக்கு சொறிதல், தலை கோதுதல், கண்கள், காது, வாயினை தேய்த்தல், எச்சில் துப்புவதை தவிர்க்க வேண்டும்.
குழந்தைகளின் ஊட்டச்சத்து விவகாரம் என்பதால் இதனைத் திறக்க வேண்டியது கட்டாயமாகிறது என்றும் அதே சமயம் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி இந்த நடைமுறைகள் முரையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதை கவனிக்க வேண்டும் என்றும் அரசியல் சமூக பார்வையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.