புதிய ஒளிப்பதிவு வரைவு மசோதாவுக்கு நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு மாநிலங்களவையில் ஒளிப்பதிவு திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்டதை அடுத்து, கடந்த மார்ச் மாதம், நிலைக்குழு அறிக்கையை சமா்ப்பித்தது.
தற்போது நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்தத் திருத்தச் சட்டத்தில் நான்காவதாக இடம்பெற்றுள்ள திருத்தத்துக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அதாவது, ஒரு முறை தணிக்கை செய்யப்பட்ட திரைப்படம் ரிலீஸ் ஆன பிறகு மத்திய அரசு கூட அதை திருத்த முடியாது. ஆனால், இப்போது தியேட்டரில் படங்கள் ரிலீஸ் ஆனாலும் அந்த படத்தை மறுமுறை ஆய்வு செய்யும்படி, தணிக்கை குழுவுக்கு மத்திய அரசு அறிவுறுத்தலாம் என்ற திருத்தம் இடம்பெற்றுள்ளது.
இந்த திருத்தங்கள் தொடர்பான கருத்துகளை, பொதுமக்கள் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு தெரிவிக்க இன்றே கடைசி நாள். இந்த மசோதாவுக்கு திரையுலகினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அந்த வரிசையில் புதிய ஒளிப்பதிவு வரைவு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சூர்யா ட்வீட் செய்துள்ளார்.
அதில், சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காகத்தானே தவிர, அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல என்று நடிகர் சூர்யா ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.