பாலியல் வழக்கில் கைதாகியுள்ள தற்காப்புக்கலை பயிற்சியாளர் கெபிராஜ் மீது மேலும் ஒரு பெண் புகார் அளித்துள்ள நிலையில் அந்த வழக்கிலும் போலீசார் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சென்னை அண்ணா நகர் பகுதியில் தற்காப்புக்கலை பயிற்சி நடத்தி வந்தவரும், தனியார் பள்ளி பகுதிநேர பயிற்சியாளருமான கெபிராஜ் மீது கேரள மாணவி பாலியல் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் தற்காப்புக்கலை பயிற்சியாளர் கெபிராஜ் மீது அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் துறையினர் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை மே மாதம் 30 ஆம் தேதி கைது செய்தனர்.
பின்னர் வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீசார் கெபிராஜை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். கெபிராஜின் பயிற்சி மையம், வீடு ஆகிய இடங்களுக்கு நேரில் அழைத்துச் சென்று விசாரணை நடத்திய போது, அவர் பயன்படுத்திய கணினியின் சி.பி.யூ, செல்போன், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து கெபிராஜால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் எனக்கூறி சி.பி.சி.ஐ.டி போலீசார் தரப்பில் 9498143691என்ற தொலைபேசி எண்ணும், atccbcid@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியும் வெளியிடப்பட்டன. இந்நிலையில் வெளிநாட்டு வாழ் பெண் ஒருவர் பயிற்சியாளர் கெபிராஜ் மீது இணைய வழியில் தானும் தற்காப்புக்கலை பயிற்சியாளர் கெபிராஜால் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் அளித்த நிலையில் அந்த வழக்கில் கெபிராஜ் மீது போக்சோ உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் அந்த வழக்கிலும் கெபிராஜை கைது செய்த அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீசார் அவரை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.